இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! கவலை தரும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை
நானுஓயா பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தின் கவலை தரும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்று மாலை, கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்திருந்தனர்.
உயிரிழந்தவர்களின் விபரம்
இதன்போது, வானில் பயணித்த 9 பேரில் ஆறு பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வானில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், முச்சக்கரவண்டி சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், வானில் பயணித்த அப்துல் ரஹீம்(55), ஆயிஷா பாத்திமா(45), மரியம்(13), நபீஹா (08), ரஹீம்(14) ஆகியோரும் வான் சாரதியான நேசராஜ் பிள்ளை(25) மற்றும் முச்சக்கர வண்டி சாரதியான சண்முகராஜ்(25) என்பவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், “தயவு செய்து விபத்து தொடர்பான கவலை தரும் காணொளிகளை யாரும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.