பீனிக்ஸ் பறவையாக மீண்டெழும் ராஜபக்சர்கள்
சமகால அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்க போராட்டங்களை தூண்டும் செயற்பாடுகளில் நாம் ஈடுபட மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் இலங்கை எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் நாமல் ராஜபக்ச இங்கு உரையாற்றினார்.
ராஜபக்சர்களின் பலம்
இதன்போது அமெரிக்க இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் வரியை இலங்கை தவிர்க்க முடியாமல் குறைக்க வேண்டியிருக்கும் என்று நாமல் தெரிவித்தார்.
“நமது அரசியல் சக்திகள் தொழிற்சாலைகள் கட்டப்படும் இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டம். இல்லையெனில், தொழிற்சங்கங்களை பயன்படுத்தி அவற்றைத் தூண்டிவிட்டு, போராட்டங்களாக மாற்ற நாங்கள் தயாராக இல்லை என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ராஜபக்சர்கள் அவ்வாறான அரசியலைச் செய்வதில்லை. எங்கள் பலத்தைப் பற்றி வாதிட வேண்டாம். அதை காண்பிக்கும் நாளுக்காக காத்திருங்கள். நேரம் வரும்போது அதைக் காண்பிப்போம். இப்போது இந்த நாட்டு மக்களுக்கு உங்கள் பலத்தைக் காட்டுங்கள்.
158 அல்லது 159 பேரை இங்கே வைத்திருப்பதன் மூலம் அமெரிக்கா எங்களுக்கு எவ்வளவு வரி விதித்தாலும், நமது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும் என்பதற்கான வலிமையைக் காட்டுங்கள். அதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இப்போது நீங்கள் புலம்புவதை நிறுத்திவிட்டு உங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய நேரம் இதுவென” நாமல் குறிப்பிட்டுள்ளார்.