அரசாங்கம் வாக்குறுதிகள் தொடர்பில் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்! நாமல் ராஜபக்ச
ஒரு வருடம் கழிந்தும் கடந்த காலம் பற்றி மட்டுமே பேசுவதில் பயனில்லை.அரசாங்கம் தங்களது வாக்குறுதிகள் தொடர்பில் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளமான நாடு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறுகளை ஆராய்வதை விடுத்து தங்களது வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன அது எந்தளவு பயனளித்தது என அரசாங்கம் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்.
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கோஷத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இன்று மக்கள் வளப்படுத்தப்படவில்லை மாறாக 159 பேரும் கோடிஸ்வரர்களானமை இன்று பேசுபொருளாகியுள்ளதை காணமுடிகிறது.
75 வருட சாபத்தினால் செல்வந்தர் ஆகமுடியாதோர் கடந்த வருடத்தில் செல்வந்தர்களாகியுள்ளனர்.
அதேநேரம், கடந்த ஒரு வருடத்தில் பொருளாதாரம் வீழ்ச்சி பாதையில் சென்றுள்ளது காய்கறி செய்கை 3.6 சதவீதத்தினால் குறைந்ததுடன் கிழங்கு, வெங்காயம் விளைச்சல் அதிகரிக்கும் காலத்தில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுயமதிப்பீடு
அதேநேரம், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது, இது குறித்து அவதானம் செலுத்தாவிடின் வெளிநாட்டிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.
அத்துடன், இறப்பர் தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இவை அனைத்து தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாகும். இதுவே ஒரு வருடத்தில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.
மின்சாரத்துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது. 80 களில் செயற்பட்டதை போல இன்றும் செயற்பட முடியாது, காவல்துறை,நீதிமன்றத்தை காட்டி அச்சுறுத்திய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அவ்வாறு அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது.
தொழிற்சங்க நடவடிக்கைக்கு அன்று இணங்காத ஆசிரியர்களை, அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பழிவாங்குகிறது.
எனவே, அடக்குமுறைகளை கைவிட்டு அரசாங்கம், மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்''' - என்றார்.



