அநுரவின் வரவு - செலவுத் திட்டமும் பொய்களாலேயே நிரம்பியிருக்கும்! நாடாளுமன்றத்தில் நாமல் எம்.பி. கடும் சாடல்
பொய் கூறுவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் வல்லவர் என்றும், விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு - செலவுத் திட்டமும் பொய்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சதெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (04.11.2026) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசு வரிகளையே அதிகரித்துள்ளது
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கப்பலிலிருந்து இறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவோம் என்று ஜனாதிபதி ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால், இப்போது அவ்வாறு செய்வது பொருத்தமானது அல்ல என்று கூறுகின்றார்.

தமது அரசு எந்தவொரு வரியையும் புதிதாக அறவிடவில்லை என்று ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் அரசு வரிகளையே அதிகரித்துள்ளது. நாட்டில் எரிபொருள், எரிவாயு வரிசைகளைத் தொடர்ந்து தற்போது டின் மீன்களுக்கான வரிசையும் உருவாகியுள்ளது.
பால்மா மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மக்களுக்கான வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள போதிலும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருவதாக அரசு கூறினாலும், உண்மையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைமையே காணப்படுகின்றது.
நிகழும் அசம்பாவிதங்கள்
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கச் சட்டங்கள் தேவை என்ற போதிலும், பச்சை குத்தியுள்ள மற்றும் தலைமுடி வளர்த்துள்ள இளைஞர்களைத் தன்னிச்சையாகச் சிறையில் அடைக்கச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது.

பொலிஸ் நிலையங்களில் இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். பொலிஸ் துறை தீவிரமாக அரசியல்மயப்படுத்தப்படுவதாலேயே இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே அரசின் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. அதில் எத்தனை பொய்கள் இருக்கப்போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.