இன்று நாமல்.. நாளை ஹரிணி..! நிமல் பெரேராவுக்கு அரசின் சக்திவாய்ந்த அமைச்சருடன் தொடர்பு - எழுந்துள்ள புதிய சர்ச்சை!
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாபார பங்குதாரர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒரேயொரு சாட்சியான நிமல் பெரேரா, தனது சாட்சியத்தை பலமுறை மாற்றியுள்ளதாகவும், சாட்சியின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் பங்குதாரர்..
மேலும் அவர் கூறுகையில், "அரசாங்கத்தின் சக்திவாய்ந்த ஒரு அமைச்சரும் நிமல் பெரேராவும் இணைந்து மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியவர்கள், பின்னர் ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என்றும், அதன் பின்னர் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
பணம் வழங்கப்பட்ட நாள், நேரம் அல்லது அது இலங்கை வந்தடைந்த விதம் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.
இந்நிலையில்தான், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவின் போது, நிமல் பெரேரா ஒரு பொய்சாட்சி என பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர தெரிவித்திருந்தார்.

தற்போது அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒடுக்க இத்தகைய நபர்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது. நாளை பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது திருத்தச்சட்டத்திற்கு எதிராகத் தனது மனசாட்சிப்படி செயல்பட்டால், பணத்தை நாமலுக்கு அல்ல ஹரிணிக்கே கொடுத்ததாக நிமல் பெரேரா கூறுவார்” என சானக்க விமர்சித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் தனக்கு எதிரான குரல்களை ஒடுக்கவும், நெல் கொள்முதல் விலை மற்றும் ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும் முற்படுகிறது.
எனினும், விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து நமால் ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியை எந்த அடக்குமுறையாலும் தடுக்க முடியாது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ராஜபக்சக்களோ இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயப்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.