சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்க தீவிர முயற்சி
ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் படி, ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படுமாயின், நிச்சயமாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உத்தர லங்கா கூட்டமைப்பின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி
இதுவே ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் வழக்கம். இப்போது ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவியை வழங்க முயற்சிக்கின்றனர்.
இன்று நமது சமூகம் நெருக்கடியான நிலையில் உள்ளது. பணவீக்கம் கிட்டத்தட்ட 100% அதிகரித்து வருகின்றது. வரிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், தொலைபேசி கட்டணம் என அனைத்தும் அதிகரித்துள்ளது.
தனியார் மற்றும் அரச ஊழியர்கள் தாங்கள் பெறும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறானதொரு பொருளாதாரப் பேரழிவை எதிர்நோக்கும் நாட்டில், அரசியல்வாதிகளாக நாம் உண்மையான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் சுட்டிக்காட்டியுள்ளோம்.
37 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்
இந்த நெருக்கடியில் இருந்து ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காப்பாற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் அணி சார்பில் செயல்படாமல் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்பதை நாங்கள் அங்கு வலியுறுத்தினோம். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரையில் அவ்வாறான அனைத்துக் கட்சி உடன்படிக்கையையோ அல்லது அனைத்துக் கட்சி ஆட்சியையோ ஏற்படுத்த முடியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள 37 இராஜாங்க அமைச்சர்கள் குழுவைப் பார்த்தால், சர்வகட்சி ஒருமித்த கருத்து அல்லது சர்வகட்சி ஆட்சி என்ற யோசனை செல்லுபடியாகாது என்பதை நிரூபித்துள்ளது.
நாம் இந்த 'சமூகத்தை', பாத்திரத்தில் உள்ள தண்ணீர்' போல ஒப்பிடலாம். 'பொருளாதாரத்தை' அடுப்புடன் ஒப்பிடுவோம். இந்த அடுப்பில் சாதாரண நெருப்பு இருந்தால், தண்ணீர் கொஞ்சம் சூடாகும். ஆனால், 'பொருளாதாரம்' எனப்படும் அடுப்பில் வைக்கப்படும் 'விறகினை' அதிகரிக்கும் போது, அதாவது வரி அதிகரிக்கும் போது, பணவீக்கம் அதிகரிக்கும் போது, பணத்தின் மதிப்பு குறையும் போது, நெருப்பு உக்கிரமாகும்.பின்னர் இந்த பாத்திரத்தில் உள்ள நீர் நடனமாடத் தொடங்குகின்றது.
தாக்குதலுக்கு துணைபோன சில குண்டர் கும்பல்
இந்த நடனம் ஆடும் நீர் ஒருவரின் உடலில் விழுந்தால் பாதிப்பு ஏற்படும். சிலர் காத்திருக்கிறார்கள், இந்த தண்ணீர் நன்றாக நடனமாடும் வரை. ஆடும் தண்ணீர் பிரச்சினையை விட, ஆடும் தண்ணீரை உடலில் ஊற்றி இந்த நாட்டை பலவீனப்படுத்தி நாட்டை இழக்கும் நிலைக்கு இழுத்து செல்ல காத்திருக்கின்றார்கள்.
ஆனால் இங்கு ஆளும், ஆட்சியாளர்களாகிய நமக்கெல்லாம் பொறுப்பு உண்டு, அடுப்பின் சூட்டை அதிகரிக்கக் கூடாது. மேலும் நீர் கொதிநிலைக்கு விழாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு அது பற்றி எந்த உணர்வும் இல்லை.
நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் அணியை பார்த்தால் அது தெளிவாகப் புலப்படும்.இராஜாங்க அமைச்சர்களை நியமித்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களை திருப்திப்படுத்துவதில் எமது நாட்டின் பிரச்சினை உள்ளதா?
தாக்குதலுக்கு துணைபோன சில குண்டர் கும்பலை இராஜாங்க அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தும் வகையில் இந்த நாட்டிற்கு பிரச்சினை உள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் நிராகரிக்கப்பட்ட அரசியல்
வளர்ந்து வரும் இந்த அடக்குமுறை சூழ்நிலையில், மக்கள் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலை மிகவும் கடுமையாக நிராகரித்தனர்.
குடும்ப அரசியலை வெறுப்புடன் நிராகரித்தனர். ஆனால் இப்போது நேற்று நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களில் ஷசீந்திர ராஜபக்சவும் இடம்பெற்றுள்ளார்.
பொதுவாக எனக்கு தெரிந்த ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் படி ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு வழங்கினால் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சு பதவி நிச்சயம் வழங்கப்படும். அதுதான் அந்தக் குடும்பத்தின் அதிகார அரசியலின் வழக்கம்.
தற்போது ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்க முயற்சிக்கின்றனர். மீண்டும் அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இவர்கள் பழைய விளையாட்டையே விளையாட முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.