நாமலுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் அரச தரப்பிலுள்ள அமைச்சர் ஒருவரின் நண்பர்! டி.வி.சானக வெளிப்படுத்திய பரபரப்பான தகவல்....
நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கியதாக சாட்சியமளித்த நிமல் பெரேரா அடிக்கடி தனது சாட்சியத்தை மாற்றிப் பேசும் ஊழல்மிக்க தொழிலதிபர்.
அநுர குமார திசாநாயக்கவின் வலது கை போன்ற ஒரு பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பராவார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் தலைமையகத்தில் இன்று (05.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்த கருத்து
அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் நிமல் பெரேரா
2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு விசாரணை என்று நான் நினைக்கிறேன். இதிலுள்ள ஒரே சாட்சி நிமல் பெரேரா என்ற ஊழல்மிக்க தொழிலதிபர் மட்டுமே.
இவருக்கு ஒன்று மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த ஊழல் தொழிலதிபர் வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிப் பேசுகின்றார்.
இந்த தொழிலதிபருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர் இந்த அரசாங்கத்தின் ஒரு அமைச்சராவார். அந்த அமைச்சரும் இந்த நிமல் பெரேராவும் இணைந்து மூன்று சந்தர்ப்பங்களில் மூன்று விதமான சாட்சியங்களை அளித்துள்ளனர்.

முதல் தடவை, நாமல் ராஜபக்சவுக்கு 50 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் கொடுத்த இடம் இல்லை, கொடுத்த திகதி இல்லை, கொடுத்த விதம் எதுவுமில்லை.
அதற்குப் பிறகு இரண்டாவது தடவை, 'இல்லை, நான் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை' என்கிறார். அதன்பிறகு மூன்றாவது தடவையாக இப்போது 100 மில்லியன் கொடுத்ததாகக் கூறுகிறார்.
ஆனால் எப்போது கொடுத்தார் என்று கேட்டால் திகதி இல்லை. இலங்கைக்கு பணம் வந்த விதம் பற்றி கேட்டால் அதுவும் இல்லை. எந்தக் காலப்பகுதியில் என்று கேட்டால் அது குறித்தும் எதுவும் இல்லை.
இந்த அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சரின் வியாபார நண்பரின் சாட்சியத்தைப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.