நாமலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட சாட்சியங்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது..!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்(Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழலில் 100 மில்லியன் ரூபாயை தாம் நாமல் ராஜபக்சவிடம் வழங்கியதாக தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசி உட்பட முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
நிமல் பெரேரா என்பவர் பல வருடங்களாக பல பிரசித்தி பெற்ற நிதி குற்றங்கள் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பெயர் குறிப்பிடப்பட்ட இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராவார்.
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் உட்பட மேலும் பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு-CID விசாரணை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து நடத்திய கூட்டு விசாரணையைத் தொடர்ந்தே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்தது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காரணங்களுக்கமைய, இந்த சர்ச்சைக்குரிய விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்தினால் 1.45 மில்லியன் யூரோ பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுத்தர அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமலி விஜேநாயக்கவின் முழுமையான உரிமையின் கீழ் இயங்கும் ‘பிஸ் சொல்யூஷன்’ (Biz Solution) என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் ஸ்டேன்டட் சாட்டட் வங்கி கணக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணம், பின்னர் தொழிலதிபர் நிமல் பெரேரா தலைவராகப் பதவி வகித்த நிறுவனத்திற்குச் சொந்தமான சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்தது.
அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட வாக்குமூலம்
விசாரணையாளர்கள் தற்போது நிமல் பெரேரா வசித்து வரும் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
முறைப்பாட்டாளர் தரப்பின் கூற்றுப்படி, “ பேஸ் சொல்யூஷன்” கணக்கிலிருந்து தனது நிறுவனத்திற்குப் கிடைத்த 800,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாயாக மாற்றி நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாக நிமல் பெரேரா இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி வழங்கியுள்ளார்.
அந்தப் தொகை அக்காலகட்டத்தில் சுமார் 100 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமமானது என முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நிமல் பெரேரா மீண்டும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு ஏர்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஏர்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்து நான்கு வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
ஏர்பஸ் நிறுவனத்திற்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த தகவல்களையும் விசாரணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு பிணை கோரியதுடன், பிரதானமாக நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணியின் வாதம்
பிரான்ஸ் விசாரணையாளர்களோ அல்லது ஏர்பஸ் அதிகாரிகளோ நாமல் ராஜபக்சவிற்கு பணம் கொடுத்ததாக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்கவில்லை என பிரதிவாதி தரப்பு வாதிட்டது.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான பிற நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நிமல் பெரேரா வழங்கிய சாட்சியங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மெண்டிஸ், அவரது நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தினார்.
குறிப்பிட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய கணக்கின் உரிமையை நிமல் பெரேரா முன்னர் நிராகரித்திருந்ததாகவும், அது இத்தாலி நாட்டவரான தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என அவர் கூறியிருந்ததாகவும் பிரதிவாதி தரப்பு வாதிட்டது.

2019 ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிமல் பெரேராவின் வாக்குமூலங்களை விசாரணையாளர்கள் இப்போது எவ்வாறு நம்புகிறார்கள் என்றும் சட்டத்தரணி மெண்டிஸ் கேள்வி எழுப்பினார்.
இருப்பினும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் அதன் பணிப்பாளர் நாயகத்தினால் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், பிணை வழங்குவதற்கு விசேட காரணங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
நிமல் பெரேராவின் நம்பகத்தன்மை குறித்து பிரதிவாதி தரப்பு எழுப்பும் சவாலானது வழக்கு விசாரணையின் போதே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் பிணை வழங்குவதற்கான விசேட காரணியாக அதைக் கருத முடியாது என்றும் கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரம தீர்ப்பளித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20