40 ஆயிரம் கைதிகளுக்குள் வெடித்த மோதல் - அமைச்சர் பதவி விலகலை சுட்டிக்காட்டிய நாமல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அதிகாரிகள் முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டிருக்காது.
இந்த வன்முறை தீவிரமடைவதற்கான சூழலை அரசே திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(07.07.2026) இடம்பெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் பதவி விலகல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவமானது, இந்த அரசின் நிர்வாகப் பலவீனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் மோதல் வெடித்த போதே அதனை ஒடுக்கத் தவறியதால் தான் அடுத்த நாள் வன்முறை தீவிரமடைந்தது.

தற்போதைய அரச நிர்வாகக் கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரச ஊழியர்களால் எந்தவித அழுத்தங்களுமின்றித் தனித்துவமான முறையில் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான சூழல் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது.
40 ஆயிரம் கைதிகள்
கடந்த 2020ஆம் ஆண்டு இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற போது, அதற்குப் பொறுப்பேற்று சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை விலகினார்.
இதனைத் தொடர்ந்து, சுயாதீன விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய அரசில் அவ்வாறான பொறுப்புக்கூறும் தன்மை எதனையும் காண முடியவில்லை.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கைதிகளை மட்டுமே வைப்பதற்கான பௌதீக வளங்கள் மற்றும் வசதிகள் காணப்படுகின்றன.
ஆனால் தற்போது போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் முறையான திட்டமிடல் இன்றி முன்னெடுக்கப்படும் கைதுகளினால், சிறைகளில் சுமார் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். பௌதீகக் கொள்ளளவைத் தாண்டி இவ்வளவு அதிகமானோரைச் சிறையில் அடைக்கும் போது, அங்குள்ள நெரிசல் நிலைமையும் மன அழுத்தமும் மேலும் தீவிரமடையும், நீர்கொழும்பிலும் இதுவே வன்முறையாக வெடித்துள்ளது என்றார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam