நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் - ஆளும் தரப்பின் நையாண்டிப் பேச்சு
தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு முன்னெடுக்கும் மக்கள் நலச் செயற்பாடுகளை எந்தவொரு எதிர்த்தரப்பாலும் அசைக்க முடியாது. ஜனாதிபதி நேரடியாகக் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து உரையாடுவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தேவையற்ற விமர்சனங்கள்
எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லாததாலும், நாடளாவிய ரீதியில் ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலையிலுமே இத்தகைய தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அரசு அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. நாட்டின் ஊடக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கியதும், ஊடகவியலாளர்களைத் தாக்கி நாட்டை விட்டு விரட்டியடித்தமையும் கடந்த கால ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் தான் நடந்தன.
தற்போதைய அரசு ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் எப்போதும் மதித்தே செயற்படும். நீதிமன்றக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் அரசமைப்புத் திருத்தங்கள் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவே மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள போராட்டங்களுக்கு அரசு எந்தத் தடையும் விதிக்காது.
ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கும் போராட்டங்களுக்கும் முழு உரிமை உண்டு. நாமல் ராஜபக்சவைக் கைது செய்வது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசின் பழிவாங்கும் அரசியல் பணி அல்ல. ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல், மோசடிகள் மற்றும் நாட்டுச் சொத்துக்களைக் கொள்ளையடித்த வரலாற்றை மக்கள் நன்கு அறிந்தவர்கள்.
நாட்டின் இளைஞர்களினதும் பொதுமக்களினதும் கனவுகளை அழித்த ராஜபக்ச குடும்பத்துக்கு மக்கள் மீண்டும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை. நாமல் ராஜபக்ச 2029 இல் ஜனாதிபதியாக வேண்டுமென்றால், சிறைச்சாலையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம்." என்றார்.