பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்! எதிர்ப்போர் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம், இதனை எதிர்ப்பவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கமைய அதனை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06.10.2026) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு
அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக இரத்துச் செய்யப்படும். ஆனால் அரசொன்றுக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

அதனை எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். எவ்வித சட்டமும் இன்றி நாட்டை நிர்வகிக்கலாம் என சிலர் நினைக்கலாம். எனினும் மற்றும் சிலர் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு இதனை விட கடுமையான சட்டங்கள் தேவை என்ற நிலைப்பாட்டிலிருக்கலாம்.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே நாம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பித்திருக்கின்றோம். இதனை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். அதனையத்து நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கமைய அதனை நிறைவேற்ற முடியும் என்றார்.