தற்காலிகமாக இடை நிறுத்தப்படவுள்ள நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையானது அக்டோபர் 23ஆம் திகதிக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சேவையை 41 வருடங்களுக்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்று(14.10.2023) ஆரம்பித்து வைத்திருந்தார்.
கப்பல் சேவை
இந்நிலையில் முன்பதிவு பற்றாக்குறை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த கப்பல் சேவையானது இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் வகையில் கப்பலின் பயணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மழைக்காலத்தில் இயக்கப்படும் ஷெரியபாணி படகு சாத்தியம் இல்லை என்பதால், இந்த சேவை நிறுத்தப்படும் என்று இந்திய கப்பல் கழகம் மற்றும் தமிழ்நாடு கடல்சார் சபை என்பன தெரிவித்துள்ளன.
மேலும், வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சீரற்ற வானிலையின் போது கப்பலை இயக்குவது
கடினமான பணியாக இருக்குமென்பதால் கப்பல் சேவை இன்று 16ஆம் திகதியும், 18ஆம் திகதி மற்றும் 20ஆம்
திகதிகளில் சேவைக்குட்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 23ஆம் திகதி முதல் குறித்த கப்பல் சேவையை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.