சத்தியாக்கிர போராட்டத்தை ஓய்வின்றி தொடரும் முத்து நகர் விவசாயிகள்
ஈழத்து நாட்டில் தமிழர் தாயகப் பரப்பில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நில அபகரிப்பு என்பது தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அரச தரப்பில் உள்ள திணைக்களங்களான தொல் பொருள் திணைக்களம், வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களம், சுற்றுலா பணியகம், இலங்கை துறை முக அதிகார சபை என இவ்வாறாக குறிப்பிட்டு சொல்ல கூடிய நிறுவனங்கள் மக்களின் தனியார் காணிகளை அடாத்தாக அபகரித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் விவசாய நிலங்களும் இலங்கை துறை முக அதிகார சபையின் ஏற்பாட்டில் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக சுமார் 800 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணி அபகரிக்கப்பட்டு தனியார் கம்பனிகளுக்கு இரு விவசாய நீர்ப்பாசன குளங்களை மூடி வழங்கப்பட்டுள்ளது.
முத்து நகர் விவசாயிகள்
இதனால் வாழ்வாதாரத்தை இழந்த குறித்த விவசாயிகள் பல வடிவங்களில் போராட்டத்தை பல தடவை நடாத்திய போதிலும் எவ்வித சாதகமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
இதனால் மனமுடைந்து போன முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை இன்றுடன் செவ்வாய் கிழமை (23.10.2025) 37 ஆவது நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விவசாயிகள் கடந்த கால பல அரசாங்கங்கள் ஆட்சி செய்த போதிலும் 352 விவசாய குடும்பங்களும் விவசாயத்தை நம்பி பரம்பரை பரம்பரையாக சுமார் 53 வருடங்களாக நெற் செய்கை உள்ளிட்ட விவசாய செய்கையில் ஈடுபட்டார்கள்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வெளியேற்றப்பட்ட விவசாயிகள் கொழும்பு ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் வரை அபகரிக்கப்பட்ட நிலத்தை மீள பெற்றுத்தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது அப்பாவி விவசாயிகளை பொலிஸார் கைது செய்து வருகின்ற நிலையில் அன்றாட ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர் மக்களுக்கு ஆதரவாக மட்டுமன்றி ஏனைய வளச் சுரண்டல்களுக்கு எதிராக கடந்த கால ஆட்சியாளர்களை குற்றம் சாட்டி அரா விலைக்கு இந்திய கம்பனிகளுக்கு தாரை வார்க்கின்றனர் என பேசிய வரலாறுகளும் உண்டு.
போராட்டம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதும் குறித்த கிராமத்தில் தேசிய மக்கள் சக்திக்காக மேடை அமைத்து கொடுத்தவர்களே இதே விவசாயிகள். குறித்த விவசாயிகளின் விவசாய நிகழ்விலும் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் போராட்டம் மூலமாக போராடிய ஒன்பது விவசாயிகளை கடந்த வாரம் சீனக் குடா பொலிஸார் கைது செய்து மறு நாள் நீதிமன்றம் ஊடாக பிணை வழங்கப்பட்டது.
அகில இலங்கை விவசாய சம்மேளனம்,மக்கள் போராட்ட முண்ணனி போன்றவர்கள் இவர்களின் சத்தியாக் கிரகப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி வந்த போதிலும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பல சிவில் அமைப்புக்கள் காணப்படுகிறது இவ் அமைப்புக்கள் எந்தவொரு அழுத்தமும் அரசாங்க தரப்புக்கு இவர்களுக்காக ஒத்துழைப்பு வழங்காமை பெரும் குறைபாடாக உள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரிய இரண்டாம் கட்டமாக தீர்வினை பெற்றுத்தருவதாக இம் மாதம் 20 ம் திகதி வரை வாக்குறு வழங்கியுள்ளார். ஆனாலும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை.
அப்பாவி விவசாயிகளின் கோரிக்கை அடங்கிய மனுவாக "விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு போன்ற பிரதான பதாகையை ஏந்தியவாறும் போராடி வருகின்றனர்.
காணி அபகரிப்பு
இது தொடர்பில் முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளன செயலாளர் திருமதி எஸ்.சஹீலா தெரிவிக்கையில் "எவ்வித சாதகமான பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை 352 விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளனர். சுமார் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்தோம் இதற்காக எங்களுக்கு மாற்று நிலமாவது தர வேண்டும்.
மேலும் முத்து நகர் விவசாய காணியை அண்மித்த காணிகளை தனியார் நிலங்கள் என ஏழு உரிமையாளர்கள் 272 ஏக்கருக்கும் மேற்பட்டவற்றை உரிமை கோருகின்றனர். இதில் தனியார் காணி என கூறி பொய்யாக உருதிகளை வழங்கி தாரை வார்த்துள்ளனர். இது தொடர்பில் காணி திணைக்களம் அரசாங்கம் ஊழல் மோசடி தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் அண்மையில் எங்கள் விவசாயிகள் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் இயந்திரம் வழங்கப்படவில்லை . இவர்களின் காணி உரிமங்களை பரிசீலனை செய்ய வேண்டும் .இதில் ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளது "எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமலும் தீர்வு வழங்காத நிலையிலும் செயற்படுவதாக இப் போராட்டத்தை வைத்து பார்க்கும் போது புலனாகிறது.
ஆட்சிக்கு மாறி மாறி வருகின்ற அரசாங்கம் எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வின்றிய நிலை காணப்படுகிறது.
1972 களில் இருந்து அப்போதைய அரசாங்கம் முத்து நகர் விவசாயிகளை வெளியேற்றாத போது தற்போதைய அநுர அரசாங்கம் இந்திய கம்பனிகளுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் விவசாய நிலத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயம் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கோரிக்கை
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாடாளுமன்றம் என விவசாயிகளின் பிரச்சினைகளை பேசிய போதிலும் ஆளும் தரப்பினர் கண்டு கொள்ளாமல் காலத்தை கடத்தி வருகின்றனர்.
இதனால் குறித்த விவசாயிகளின் ஜீவனோபாயமாக விளங்கும் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய காலம் உள்ளது. இது குறித்து விவசாயியான பாபு தெரிவிக்கையில் " விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரியே போராடிகிறோம்.
கருத்து சுதந்திரத்தை கூட பிரயோகிக்க முடியாத நிலையில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானோம். அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து எங்களை பொலிஸார் கைது செய்கிறார்கள். எங்கள் விளை நிலங்கள் எங்களுக்கு வேண்டும்" என தெரிவித்தார்.
இந்த விவசாயியின் மனைவி கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இடம் பெற்ற கவனயீர்ப்பின் போது பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் தூக்கி வீசப்பட்டார். இதனால் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு கையை தூக்க முடியாத அளவுக்கு காயமடைந்துள்ளார்.
பின்னர் ஓரிரு நாட்களின் பின்னர் குணமடைந்து தற்போது சத்தியாக் கிரகப் போராட்டத்திலும் ஈடுபடுகிறார். குறித்த பெண்ணை தாக்கிய பொலிஸ் உயரதிகாரி வடக்கில் உள்ள தலைமையகப் பொலிஸ் நிலையமொன்றுக்கு தலைமை பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்கள் வாக்குகளை பெறுவதற்காக பல பொய் வாக்குறுதிகளையும் உபாயங்களையும் கையாளும் அரசியல் பிரதிநிதிகள் தேர்தலின் பின் மக்கள் வாக்குகளை விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே தான் விவசாய நிலத்தை அபகரிக்கப்பட்ட குறித்த தொகை ஏக்கர் நிலங்களை உரிய விவசாய குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 23 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



