தேர்தலை புறக்கணிக்க முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் : கஜேந்திரன்
தமிழ் மக்கள் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களும் எதிர்கால தேர்தலை ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (Selvarajah Kajendran) தெரிவித்துள்ளார்.
அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் நலன்கள்
மேலும் தெரிவிக்கையில், “தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் என்பது ஆரோக்கியமான விடயமாகும்.
கடந்த மூன்று ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் எமது கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த விடயத்தை வலியுறுத்தி வருவதுடன் வெளியிடங்களிலும் கூறி வருகின்றார்.
இந்த ஒன்றுபடுதல் என்பது நிரந்திரமாக தமிழ் பேசும் மக்களின் நலன்கள் உள்ளிட்ட நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை இந்நாட்டில் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.இதற்கு காரணம் ஒற்றையாட்சி அரசாங்கம் தான்.
பெரும்பான்மையாக அதிகாரம் ஒரு சாரார் வசம் இருக்கின்ற போது தமிழ் பேசும் மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
வல்லாதிக்க சக்தி
தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பிளவுகள் எதிர்காலங்களில் ஏற்படக் கூடாது எனின் ஒற்றையாட்சி ஒழிப்பினை மேற்கொள்ள ஹக்கீம் எம்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமஸ்டி அரசியலமைப்பினை இந்நாட்டில் கொண்டு வர அவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து அதன் பின்னால் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைவினை மேற்கொண்டால் தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.மாறாக ஒற்றுமை என்ற வார்த்தை பிரயோகம் சம்பந்தன் எம்.பியிடம் கேட்டு எமக்கு புளித்து விட்டது.
இந்த தமிழ் மக்களை ஏமாற்றி வல்லாதிக்க சக்திகளுக்கு தேவையான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்குகளை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த 18 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கின்றது.
இவ்வாறு தான் முஸ்லிம் தலைவர்களும் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.
எனவே எதிர்காலத்திலாவது இவ்வாறான அணுகுமுறைகளை கைவிட்டு தமிழ் முஸ்லிம் மக்களிற்கான நிரந்திர தீர்வு ஒன்றினை முன்வைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |