ஜனாஸா எரிப்பு விவகாரம்: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராயக் கோரிக்கை
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்
இந்நிலையில், குறித்த பிரேரணையை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி, 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கையளித்தனர்.
முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில், சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை மனித உரிமை மீறலாகவும் அநீதியாகவும் சுட்டிக்காட்டியுள்ள கோரிக்கை கடிதம், இந்த விவகாரம் தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
