சாப்பிட மட்டும் வாய் திறக்கும் அரசாங்க தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மனோ கணேசன் விளாசல்
தமது அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜேவிபி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்திடம் தான் அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்புள்ள எல்லோரையும், மாவட்ட செயலகத்தில் கூட்டி, சுகாதார அமைச்சர், ஒரே நாளில் முடிக்க வேண்டிய பிரச்சினை தான் இந்த, கல்முனை சீருடை பிரச்சினை!
தற்காலிக தீர்வு
இதை செய்யாமல், தமிழ் பேசும் தரப்புகள் சமூக தளங்களில் அடித்து கொண்டு நாறட்டும், சாகட்டும், என ஆகஸ்ட் 8ம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக, காலம் கடத்தி, விட்டு இப்போது "தற்காலிக தீர்வு" என்ற ஒன்றை அறிவித்து இருக்கிறது, அரசாங்கம். இந்த நடவடிக்கைக்கு கூட ஏன் இத்தனை தாமதம்?

இதற்குள் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை சந்தித்தது ஒரு புறம் இருக்க, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள், இது வரை?
வெற்று சமத்துவ கோஷம்
உண்மையில், அரசாங்க தமிழ், முஸ்லிம், கால் - அரை - முக்கால் - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியே தத்தமது ஈழத்து - மலையக - முஸ்லிம் - தமிழ் மக்களிடம் சும்மா, சும்மா, வாய் சவடால் அடிக்கிறார்களே தவிர, உள்ளே "சாப்பிட" மட்டும் தான் வாய் திறக்கிறார்கள், என்ற உண்மையும், அரசாங்க அதிகார மையத்தின் பக்கத்தில் கூட, இவர்கள் எவருமே இல்லை என்ற நடப்பும், மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளன.

இதற்குள், "நாம் இலங்கையர்" என்ற வெற்று சமத்துவ கோஷம் வேறு! எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் தான் "சமத்துவம்"! இது தான் உண்மை! நான் அமைச்சராக இருக்கும் போது, அடிக்கடி, நான் அமைச்சரவையில், எழுப்பிய கூச்சல், மேசையில் அடித்த அடி, போட்ட சண்டை, என்பன என் ஞாபகத்தில் வந்து போகின்றன என தெரிவித்துள்ளார்.