விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் குறித்த தவறான தகவல்கள் : சந்தேக நபர் கைது
சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, சரிபார்க்கப்படாத தவறான தகவல்களை வழங்கிய ஒருவரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
இந்த சந்தேக நபர் நேற்று (18.08.2026) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலை
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக, சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு மூலம் சரிபார்க்கப்படாத பொய்த் தகவலைப் பரப்பிய குற்றத்திற்காக இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பெல்லன்விலவில் உள்ள பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஆவார்.
இந்தச் சந்தேக நபர் இன்று(19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும், இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.