ஊழல்வாதிகள் அடுத்தடுத்து சிறைக்கு செல்வது உறுதி - இளங்குமரன் பகிரங்கம்
ஊழல் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவது உறுதி, மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த உயர் பதவிகளிலும் முந்தைய காலங்களில் இருந்தாலும் அவர்கள் சிறை செல்வது தவிர்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அம்பாள் நகர் சாந்தபுரம் கிராமத்திற்கான மக்கள் சந்திப்பும் வட்டார சபை தெரிவும் இன்று(03-10-2026) பகல் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இளங்குமரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்வாதிகள் மீதான கைது நடவடிக்கை
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்பது உறுதி மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், எந்த உயர் பதவிகளில் முன்னைய காலங்களில் இருந்திருந்தாலும் அவர்கள் சிறை செல்வது தவிர்க்க முடியாதாகும். அவர்களுக்கு தெரியும் தாங்கள் கைது செய்யப்படலாம் என அதனால் தான் இப்போது நீதிமன்றங்களில் முன்பினை கோரி நிற்கின்றார்கள்.

குறிப்பாக கடந்த காலங்களிலே சில பெற்றோர்கள் பிள்ளைகளை பார்ப்பதற்காக சிறை சென்றார்கள் , இப்பொழுது உயர் பதவியில் இருந்தவர்கள் கூடுதல் சுபபோகங்களை அனுபவித்தவர்கள் உயர் ரக சொகுசு வாகனங்களில் நீதிமன்றங்கள் சிறைச்சாலைகளுக்கு முன்னால் சென்று வருகின்றனர்.
அனோஜனின் விடுதலை
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் எதிர்க்கட்சியினரும் ஈடுபட்டு இருக்கிறார்கள், அவர்களும் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள், எதிர்காலத்திலும் பலர் இந்த போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு கைது செய்யப்படலாம்.

குறிப்பாக சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் விடுதலை என்பதில் இந்த அரசாங்கம் மிகக் கரிசனை கொண்டிருக்கின்றது. அதற்கான ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அந்த குழு அதனை முன்னெடுத்திருக்கின்றது.
ஜனாதிபதியின் மீது நம்பிக்கை இருக்கின்றது, அவரை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வட்டார சபை தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்டத்திற்கான இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.