வடக்கு மக்களை கொந்தளிக்க வைத்த திலீபன் சிலை அகற்றம் - நீதிமன்றத்தில் தற்போதைய நிலை என்ன..!
ஈழத்து மக்களால் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தில், பொலிஸார் நல்லூரில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை அடாவடியாக அகற்றிச் சென்ற விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று (02.10.2026) நீதிமன்றத்தில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை, பொலிஸார் அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி எடுத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு
அதன் பின்னர், யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை, 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில் பொலிஸாரால் அடாவடியாக அகற்றப்பட்டது.
இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், அரசு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என இரு தரப்பும் மாறி மாறி ஒருவரையொருவர் சாடிக்கொண்டிருந்தனர்.
ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பில் யாரும் பொறுப்பேற்று மக்களுக்கு உரிய விளக்கத்தை வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கு நேற்று (02) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், இந்த விடயம் தொடர்பில் எனக்கு உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
பொலிஸார் தரப்பிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே நான் நீதிமன்றத்தில் முன்னிலையானேன். இந்த வழக்கில் இதுவரை யார் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.