சபாநாயகர் இல்லத்தில் நடந்தது என்ன! 8 ஊழியர்களுக்கு இலஞ்ச ஆணைக்குழு அதிரடி அழைப்பு
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சொந்தமான பொருட்கள் தொடர்பான பதிவுப் புத்தகம் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த இல்லத்தில் பணியாற்றும் 8 ஊழியர்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமல் போனதாகக் கூறப்படும் குறித்த பொருட்கள் பதிவுப் புத்தகத்தையும் ஆணைக்குழுவிற்கு கொண்டு வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியினால், இலங்கை நாடாளுமன்றத்தின் நிர்வாகப் பிரதிப் பணிப்பாளர் ஊடாக குறித்த ஊழியர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணையொன்றை முன்னெடுத்து வரும் பின்னணியிலேயே, குறித்த பொருட்கள் பதிவுப் புத்தகம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அழைப்பின் அடிப்படையில், ஊழியர் ஒருவர் நேற்று (2) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது விசாரணையாளர்கள் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். ஏனைய 7 ஊழியர்களும் எதிர்வரும் 12, 13, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முகாமையாளரான பசன் அத்துகோரளவிடமும் அண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லம்
இதன்போது அவரிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சபாநாயகர், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்காமல், மாலிமா கட்சியின் கொள்கைக்கு அமைவாக கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டேயில் அமைந்துள்ள சபாநாயகர் இல்லம் 2025 ஒகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிலையமாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டே சபாநாயகர் இல்லத்தில் இருந்த பெறுமதியான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், மெத்தைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளுப்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய முதலில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டது.
குறித்த பொருட்கள் தொடர்பான பதிவுப் புத்தகம் காணாமல் போனமை தொடர்பில் தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.