தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு உயர்நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
தென்னிந்தியத் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா, தனது பாடல்களின் காப்புரிமை (Copyright) தொடர்பாகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம் விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
தனியார் இசை நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புக்கு எதிராக இளையராஜா தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
134 திரைப்பட பாடல்கள்
இந்த நீதிமன்ற உத்தரவின்படி, அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட மிக முக்கிய 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்காகவும், தயாரிப்பாளர்கள் மற்றும் இசை நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இளையராஜா நீண்டகாலமாகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையிலேயே, குறிப்பிட்ட தனியார் இசை நிறுவனத்துடனான பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திற்குச் சாதகமாக ஏற்கனவே வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளதுடன், இளையராஜாவின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளது.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலத் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கற்களாகவும், அவரது இசைப் பேரரசுக்கு அடித்தளமாகவும் அமைந்த பாடல்களே இந்த வழக்கின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO