பொசன் பௌர்ணமி தினத்தில் அட்டகாசம் செய்த கும்பல் - விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்
புதிய இணைப்பு
பொசொன் பௌர்ணமியன்று தானசாலையொன்றின் அருகில் இளைஞரொருவர் மீது தலைக்கவசம் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, 16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொளி மூலம் இந்த சம்பவம் வெளிப்பட்டதை தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றின் அடிப்படையில் மாலபே பொலிஸார் விசாரணைகளை தொடங்கியிருந்தனர்.
காணொளியில், ஒரு இளைஞர் ஹெல்மெட்டை பயன்படுத்தி தாக்குவது, உதைப்பது மற்றும் பல வன்முறை செயல்களில் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தானசாலை வரிசையில் ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு இந்த வன்முறைச் சம்பவத்திற்கு வழிவகுத்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வரிசையில் முன்னேற முயன்ற இருவரை ஒழுங்காக வரிசையைப் பின்பற்றுமாறு பாதிக்கப்பட்டவர் கேட்டுக்கொண்டதால், வரிசையில் நின்றிருந்த நபர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் படிப்படியாக முற்றி, மோதலாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகராறு மேலும் தீவிரமடைந்து, அது இறுதியில் ஒரு வன்முறைத் தாக்குதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (01) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, மோசமாக நடந்துகொண்ட ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(30.06.2026) வேயாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
5 இளைஞர்கள் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று (29) நண்பகல் வேயாங்கொடை அருகே பொசன் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 'மிஹிந்து பெரஹரா' ஊர்வலம் நிமித்தமாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, கெப் ரக வாகனமொன்றில் வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளன.
இதனையடுத்து, இன்று(30) குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நிட்டம்புவ மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வேயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.