இலங்கையர்கள் படுகொலை விசாரணையின் இறுதி அறிக்கை: மலேசிய அதிகாரிகள் தகவல்
அண்மையில் மலேசியாவின், செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கோலாலம்பூர் பகுதிக்கான உயர் பொலிஸ் அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித், வழக்குத் தீர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், நான்கு சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் - பெட்டாலிங் ஜெயாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்லாவுதீன் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மரணம் தொடர்பான விசாரணை மரணங்கள் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 அன்று, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு சென்றபோது வீட்டில் இலங்கை ஆண்களின் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, தலையில் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது.
பொலிஸ் விசாரணை
ஸ்டோர் அறையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதில் ஒரு உடல் முற்றிலும் ஆடையின்றி இருந்தது. இரவு 11 மணியளவில் நான்கு மாடி கடை வீட்டில் இருந்து வரும் குழப்பம் குறித்து பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த இலங்கை தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.'' என அவர் கூறியுள்ளார்.