ரணில் சர்வதேச அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டை! அருட்தந்தை மா.சத்திவேல்
ஜனாதிபதி சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக கொடூரமானது
என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான
தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (05.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேட்டி கண்டபோது ஜனாதிபதி வீதியோர சண்டியன் மற்றும் பாதாள உலக முகத்தையும் வேறும் பல முகங்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.
சர்வதேச விசாரணை இல்லை
அதில் குறிப்பாக சர்வதேச மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையினை புறந்தள்ளி எந்த விடயம் தொடர்பிலும் சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக மிக கொடூரமானது.
எல்லா அரசியல்வாதிகளும் தனது தேர்தல் கால அரசியல் முகத்தினை தேர்தல் மேடைகளில் வெளிப்படுத்துவார்கள். ஆனால் இவர் சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றினையும் உள்நாட்டு தேர்தல் வெற்றிக்கான மேடையாக்கி தான் யாருடைய காவலன் என வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்களே உங்கள் வாக்குகள் இனி எனக்கு வேண்டாம் எனும் செய்தி மிக ஆழமானது. தற்போதைய ஜனாதிபதியே விடுதலை இயக்கத்தை உடைத்த முதல் பிரதானி.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க முன்வைத்த அரசியல் தீர்வு திட்டத்தை நாடாளுமன்றத்திலேயே கொளுத்தியவர். இவரே 2009 இனப்படுகொலை பின்னால் உந்து சக்தியாகவும் செயற்பட்டவர். தமது நல்லாட்சி முகத்தோடு ஆணை குழு அமைத்து அரசியல் தீர்வு யோசனைகளை பெற்று நாடகமாடியவர்.
தேர்தலுக்கான வாக்கு வேட்டை
தற்போது ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் காணாமல் ஆக்கப்பட்டோர் என ஒருவரும்
இல்லையென்றதோடு இனப்பிரச்சனை காண கலந்துரையாடல்கள் என தமிழ் தலைவர்களை அழைத்து
ஏமாற்றி அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தமே தீர்வு என இந்திய சார்பு முகம்
காட்டி சிங்கள இனவாத புத்த பிக்குகளை திரை மறைவில் தூண்டி விட்டு அவர்களை
வீதியிலே இறக்கி 13 நகல் யாப்பினை வீதியிலே எரிக்கச் செய்தார்.
தற்போது உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். இனி இந்த நாட்டில் தமிழர்களுக்கு எத்தகைய நீதியும் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
தமிழர்களை பொறுத்தவரையில் இந்தியா உட்பட வல்லரசுகளையும் உள்ளடக்கிய 30க்கு மேற்பட்ட நாடுகள் யுத்த குற்றவாளிகள் அதனால் தான் தனது குற்றங்களை மறைக்கவும் அரசியல் பொருளாதார தேவைகளுக்காகவும் இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தாமல் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரணில் தனது அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டையை மேற்கு நாடு ஒன்றிலிருந்தே ஆரம்பித்துள்ளார்.
உயிர்ப்பு ஞாயிறு குண்டு தாக்குதல் வேளையில் தம் கடமையை நிறைவேற்ற தவறிய
நல்லாட்சி ஜனாதிபதி அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டே சர்வதேச விசாரணை
வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என்பது நம்முடைய குற்றத்திலிருந்து
மீளவும், யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை தடுத்து
நிறுத்தவும் அடுத்த தேர்தலுக்கான ஆயத்தமாகவுமே.
இதே வழியை காட்டினாலும் பின்பற்றி குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு என வெளிப்படையாகவே அறிவித்ததோடு சர்வதேச விசாரணை தேவையில்லை என அரசியல் குத்து கரணம் அடித்துள்ளார். ரணிலும் தமது அரசியலுக்காக குற்றவாளிகளின் பக்கம் சாய்ந்து சர்வதேச ஊடக மேடையில் நின்று எத்தகைய சர்வதேச விசாரணை இல்லை என்பது தேர்தல் வாக்கு வேட்டை அன்றி வேறில்லை.
சிங்கள பௌத்த வாக்கு
தெற்கின் மக்களுக்கும் வீதியில் நின்று போராடுவோரின் குடும்பங்களுக்கும் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி விட்டால் அமைதியாகி விடுவார்கள் என்பது கடந்த ஒரு வருட காலத்தில் அனுபவ ரீதியாக அறிந்தவர் போர் குற்றங்களையும் உள்ளடக்கி சர்வதேச விசாரணை தேவையில் இல்லை என்பதன் மூலம் அனைத்து அரசியல் கொலையாளிகள், பொருளாதார கொலையாளிகள் வாக்குகளாலும் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளாலும் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாகிவிடலாம் என்பதுவே ரணிலின் திட்டம்.
மேற்குலகில் தெரிவாக இருக்கும் ரணில் ஒரே நேரத்தில் இந்தியாவையும் சீனாவையும் சமாளித்துக் கொண்டு முன் நகர்பவர் கோத்தாபய ராஜபக்சவை போன்று சிங்கள பௌத்த வாக்குகளோடு தனது ஜனாதிபதி கனவை நினைவாக்க முயற்சிக்கின்றார். இது நாடு அபாயகரமான காலத்தை நோக்கி தள்ளப்படுகின்றது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.
வடகிழக்கிலும் மலையத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிர்காலம் நலமாக அமையப் போவதில்லை என்பதை தமிழ் தலைமைகள் உணர்ந்து சுகபோக அரசியலுக்கு அப்பால், அரோகரா கோசங்களுக்கு அப்பால் மக்கள் சக்தியை பலப்படுத்தும் கூட்டு முயற்சிக்கு உடன்படல் வேண்டும்.
இல்லையெனில் எதிர்காலத்தில் இருப்பதை இழந்து ஒட்டுமொத்த தமிழர்களும் இனமாக அரசியல் ரீதியில் ஆண்டியாக நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். வீதி போராட்டங்களுக்கு அப்பால் அரோகரா கோசங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி யோடு அரசியல் பயணத்தை தொடங்க தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்று கூடி அரசியல் அபிலாசைகள் விட்டு விலகாது பயணிக்க வேண்டும்.