ஐ.நா தடையை மீறி வடகொரியா சோதனை: ஒரே நாளில் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதால் பரபரப்பு
தென் கொரியாவின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வடகொரியா இன்று(8) புதன்கிழமை அன்று ஒரே நாளில் அடுத்தடுத்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகளின் (JCS) தகவல்படி, வடகொரியாவின் வோன்சன் (Wonsan) பகுதியிலிருந்து இன்று புதன்கிழமை மதியம் 2:20 மணியளவில் கிழக்குக் கடற்கரையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
ஏவுகணை சோதனை
சுமார் 240 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்ற இந்த ஏவுகணைகள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை அன்றும் பியாங்யாங் பகுதியிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை தென் கொரிய இராணுவம் கண்டறிந்துள்ளது.
இந்தத் தொடர் சோதனைகளை அடுத்து, தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகை (Blue House) அவசர தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தைக் கூட்டியது.
தென் கொரியா கண்டனம்
ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதாகத் தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் அரசும் இந்தச் சோதனைகள் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டின் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது சோதனைகளாக இவை பதிவாகியுள்ளன.
வடகொரியா தனது தற்காப்பு உரிமையை நிலைநாட்டவே இந்தச் சோதனைகளை நடத்துவதாகக் கூறிவரும் நிலையில், திரவ எரிபொருளுக்குப் பதிலாகக் கையாளுவதற்கு எளிதான 'திட எரிபொருள்' (Solid-fuel) தொழில்நுட்பத்தை மேம்படுத்தவே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.