நாவிதன்வெளியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Video)
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல் நினைவு தினம் இன்று (18.05.2023) நாவிதன்வெளியில் இலங்கை தமிழரசுக்கட்சியின்
ஏற்பாட்டில் நடைபெற்றது.
வலிசுமந்த முள்ளிவாய்க்கால் என்னும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நாவிதன்வெளி, 15ஆம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுருகன் ஆலய வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், கி.துரைராஜசிங்கம் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கூட்டுப்பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுதினம் உணர்வூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஏனையவர்களும் ஈகச்சுடர் ஏற்றியதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
தனது சொந்த மக்களை அழித்த மகிந்த ராஜபக்ச
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், தனது சொந்த மக்களை அழித்ததற்காக மண்ணை முத்தமிட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய நாட்டின் தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்தார்.
அந்த துக்கமான செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு நிறைவேறியதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிவந்தது. அக்காலத்தில் ஆயுதங்கள் மௌனிக்காத காலம். முள்ளிவாய்க்கால் நினைவினை கூட செய்யமுடியாத நிலையிலிருந்த காலம்.
அந்த காலத்தில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தது மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமேயாகும்.
ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் பல இருந்தபோதிலும் இந்த மண்ணில் மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். எங்களுக்கு ஏற்பட்டது பாரிய இனப்படுகொலை. ஆனால் எங்களது அரசியல்வாதிகள் சிலர் கூட இன்றும் இனப்படுகொலையென்று சொல்வதற்கு தயங்குகின்றார்கள்.
இனப்படுகொலை
யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இனம் வெளியேற்றப்பட்டதற்காக அதற்கு இனசுத்திகரிப்பு என்று கூறுகின்றவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டதற்கு இனப்படுகொலையென்று சொல்வதற்கு தயங்குகின்றார்கள்.
இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இந்த நீதியானது இந்த நாட்டின் உள்ளகத்திலிருந்து நாங்கள் பெறமுடியாது, இந்த நாட்டின் அரசியலிடமிருந்து பெற முடியாது. ஆகவே எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இந்த ஆத்மாக்கள் என்ன நோக்கத்திற்காக தங்களை தியாகம் செய்திருக்கின்றன. அந்த நோக்கங்கள் நிறைவேறும் வகையிலே நாங்களும் செயற்படவேண்டியவர்களாகயிருக்கின்றோம். அவர்களின் தியாகங்களும் மனவேண்டுதல்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக தமிழரசுக்கட்சியாகிய நாங்கள் ஒற்றுமையாக உழைக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
முள்ளிவாய்க்கால் என்ற பாரிய பேரவலம் எங்கள் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான நீதியை நாங்கள் விரைவாக பெற வேண்டுமாகயிருந்தால் தமிழ் தேசியத்தினை நேசிக்கின்ற அத்தனை கட்சிகளும் எந்தவித பாரபட்சமுமின்றி ஒற்றுமையாக இந்த அரசுக்கும் சர்வதேசத்திற்கும் குரல்கொடுக்க வேண்டும்.
தங்களது உயிர்களை தியாகம்செய்த உறவுகள்
மாறுபட்ட கருத்துகளை கட்சிகள் வெளிப்படுத்துமாகயிருந்தால் முள்ளிவாய்க்காலில் தங்களது உயிர்களை தியாகம் செய்த உறவுகளின் நோக்கங்களை நாங்கள் நிறைவேற்ற முடியாது.
ஒற்றுமை அவசியம். அரசியலுக்கு அப்பாலும் நாங்கள் சிந்திக்க வேண்டும்.தமிழ்தேசியத்தினை நேசிக்கின்ற அனைவரும் ஒருமித்த கருத்துடன் சர்வதேசத்திற்கும் இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் எமது கோரிக்கையினை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு கட்சியாகவோ, சில கட்சிகளாகவே குரல்கொடுப்பதால் மாத்திரம் இந்த ஆத்மாக்களின் நோக்கத்தினை அடைய முடியாது. இப்போது பலரும் பலவிதமாக சென்று அரசுடன் பேசுகின்றார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். ஒருமித்த பேச்சாகயிருந்தால் எங்களுக்காக உயிர்நீர்த்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றமுடியும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











