யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நினைவேந்தல்: கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு (Photos)
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை 2:30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.
இதன்போது பொதுசுடர் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி - தீபன்
யாழ் வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது..
நினைவேந்தலில் நினைவுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை கிளைத் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் உறவினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் (18.05.2023) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
போரின் போது யாழ். புது மாத்தளனில் தனது கணவரைப் பலி கொடுத்த தக்ஷாயினி
அருள்நேசயோகநாதன் அஞ்சலிச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன், பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர் சண்.தயாளன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











