முல்லைத்தீவில் இரு கிராமங்களுக்கிடையில் உள்ள வீதியின் நிலை: முக்கியத்துவம் உணராத அபிவிருத்திச் சங்கம்
முல்லைத்தீவில் (Mullaitivu) இரு கிராமங்களின் எல்லையாக அமைந்துள்ள வீதியொன்றின் புனரமைப்பானது தொடர்ந்து முன்னெடுக்கப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வீதியை பயன்படுத்தி வரும் மக்கள் வீதியின் அபிவிருத்தியினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உரிய தரப்பினர் கவனமெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுப்புக்குளம் மற்றும் முறிப்பு கிராமங்களின் எல்லையாக அமையும் இந்த வீதியின் குறித்த சேதமடைந்த பகுதியை தொடர்ந்து திருத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோமீற்றர் நீளமான இந்த எல்லை வீதியில் 150 மீற்றர் நீளத்திலும் சற்றுக்கூடிய தூரம் மட்டுமே புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மாரி காலங்களில் குறித்த எல்லை வீதியின் சேதமடைந்த பகுதியூடாக வெள்ள நீர் பாய்ந்து செல்வதும் அதனால் அந்த பாதையினை அவ்வேளைகளில் பயன்படுத்த முடியாததும் பெரும் குறையாக இருப்பதாகவும் அவ்வீதியை பயன்படுத்தி வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதியின் அமைவு
மேலும், உடுப்புக்குளம் கிராமத்தினை முறிப்பு கிராமத்தில் இருந்து இந்த வீதி பிரித்து நிற்கின்றது. வடக்கு - தெற்காக அமையும் இந்த வீதியினை மூன்று துண்டுகளாக பிரித்து அதன் அபிவிருத்தியை நோக்க முடியும்.
முதல் பகுதி, மணலாகவும் வெள்ளம் பாய்ந்து அரிக்கப்பட்ட பள்ளங்களை கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த பகுதியின் 50 மீற்றர் நீளமான பகுதி சீமெந்து வீதியாக புனரமைக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து மீதமிருக்கும் பகுதி புனரமைக்கப்படவில்லை என அவ்வீதியினை பயன்படுத்தி வரும் வாகன சாரதியொருவர் குறிப்பிட்டுகின்றார்.
இரண்டாவது பகுதி, தார் இடப்பட்ட வீதியாகும். உடுப்புக்குளம் முறிப்பு வீதியின் பகுதியாக இது இருக்கின்றது. ஊரினை குறுக்கறுத்துச் செல்லும் வீதியின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்த பகுதி தார் இடப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூன்றாவது பகுதி, மணலாகவும் எந்தவொரு அபிவிருத்திச் செயற்பாடும் முன்னெடுக்கப்படாத நிலையில் இருப்பதாகவும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
சிதைந்த வீதியின் பகுதி
சீமெந்து வீதியாக உடுப்புக்குளம் முறிப்பு எல்லை வீதியின் ஒரு பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி பகுதியை வலுவான முடிவிடமாக அமைக்காததால் அது சிதைந்து போய்விட்டது.
தொடர்ந்து சிதைந்து போகாதிருக்க அதன் அடியில் கற்களை போட்டு அணை இட்டுள்ளதாக அவ்வூர் இளைஞர் ஒருவருடன் மேற்கொண்ட பாதையின் சிதைவு பற்றிய உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். கடந்த வருடம் ஏற்பட்டிருந்த கனத்த மழை வெள்ளத்தினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே, சீமெந்து வீதியின் இறுதிப் பகுதி சிதைந்து போயுள்ளதனை அவதானிக்கலாம். வீதியின் சிறிய பகுதியினை சீமெந்து வீதியாக மாற்றும் முயற்சியில் அதனை முடிவுறுத்தும் போது சிதைந்து போகும் தகவினை கருத்தில் எடுத்திருக்காததன் விளைவாக இது இருப்பதனை அவதானிக்கலாம்.
பாதையின் பயன்பாடு
கிராமங்களுக்கு குறுக்காக செல்லும் உடுப்புக்குளம் முறிப்பு வீதியின் மீது பொருந்தியவாறு ஒரு பகுதியை கொண்டதும் அந்த வீதிக்கு செங்குத்தாக செல்வதுமான எல்லை வீதியை முழுமையாக புனரமைக்கும் போது அதிக பயன்பாடு உடையாதாக இருக்கும் என அக்கிராமத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
கிராமங்களுக்கு இடையில் அவற்றின் எல்லையாக இருக்கும் பாதைகள் இலகுவான போக்குவரத்தை செய்யும் வகையில் அமையும் போது தொடர்பாடல் விருத்தியடைவதோடு வியாபார முயற்சிகளும் இலகுவாக்கப்படும். கிராமங்களும் எழிலுறுவதோடு புதிய முயற்சிகளுக்கு வழிகோலும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வீதியின் வழியே தென்னம் தோப்பு மற்றும் வயல் நிலங்களுக்கான போக்குவரத்தினை செய்ய முடியும். இந்த வீதியின் ஒரு முனை உடுப்புக்குளம் குமாரபுரம் வீதியுடன் இணைப்பு கொண்டிருப்பதால் இந்த வீதியின் அபிவிருத்தி பயணங்களை மேலும் இலகுவாக்குவதாக அமையும் எனவும் அவர் விளக்கியிருந்தார்.
கிராம அபிவிருத்திச் சங்கம்
உடுப்புக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் இந்த வீதியின் அபிவிருத்தியில் கூடிய கவனமெடுக்க வேண்டும் என அவ்வீதியில் தன் வீட்டினை கொண்டுள்ள ஒருவர் குறிப்பிட்டுகின்றார்.
கடந்த காலங்களில் இருந்து வந்த கிராம அபிவிருத்தி சங்கம் உரிய கவனத்தினை எடுத்திருக்க வில்லை. அவர்களின் அக்கறை இன்மையினால் இந்த வீதியின் அபிவிருத்தி முழுமை பெறாது இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
தற்போதுள்ள கிராம அபிவிருத்தி சங்கம் கவனம் எடுப்பதாக கூறியுள்ள போதும் அது உரிய காலங்களில் நடைபெறுமா? என்ற கேள்வி இருப்பதையும் அவருடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
கிராமத்தின் உட்கட்டுமானங்களில் வீதிகளின் புனரமைப்புகள் முதன்மையானவை என்பதையும் கிராமத்திற்கு கிடைக்கும் அபிவிருத்தி சந்தர்ப்பங்களில் இந்த வீதியின் புனரமைப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தல் வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் பலரின் வேண்டுகோளாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.
எல்லை நிர்ணயம்
மேலும், வன்னியில் பல கிராமங்களின் எல்லைகள் தொடர்பில் தெளிவற்ற தன்மையினை அவதானிக்க முடியும்.
கிராம மக்களுக்கும் சரி நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் சரி கிராமங்களின் எல்லைகள் தொடர்பில் தெளிவற்றவற்றை அடையாளப்படுத்த முடியாத ஒரு இயல்பு இருப்பதனை அவதானிக்கலாம்.
இந்த இயல்பு இருப்பதற்கு சரியான எல்லை நிர்ணய விதிகளை பின்பற்றாமையும் ஒரு காரணமாகலாம் என கிராம எல்லைகள் தொடர்பில் ஓய்வுபெற்ற கிராம சேவகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, உடுப்புக்குளம் முறிப்பு கிராமங்களின் எல்லை ஒரு வீதியினால் பிரிக்கப்பட்டு தெளிவாக எல்லைப்படுத்தப்பட்டு இருப்பது ஆரோக்கியமான விடயம். அதனை பேணிக்கொள்ள அக்கிராம மக்கள் முயற்சிக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிராமங்களின் எல்லைகள் சரியாக அமையும் போது அதிகளவிலான மாற்றங்கள் ஆரோக்கியமான முறையில் நடந்தேறும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |