மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணிலின் வருகையும்..! மயிலத்தமடு மேய்ச்சல் தரை போராட்டத்துக்கு தீர்வு இல்லாத ஏமாற்றமும்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டுநாள் பயணத்தை மேற்கொண்டு மட்டக்களப்பில் வருகை தந்து ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட மாவட்டசெயலக புதிய கட்டடத்தொகுதியை மீண்டும் திறந்து வைத்தார்.
புதிதாக திராய்மடுவில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது கடந்த 2024, யூன்,10ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரன் நாடாவெட்டி திறந்து வைத்தார்.
அதன்பின்னர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியை கௌரவப்படுத்துவதற்காக கடந்த 2024, யூன்,22ல் மீண்டும் ஒருமுறை நாடவை வெட்டி அதே மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததுடன் அதே இடத்தில் காணி உறுதிப்பத்திரங்களையும் சிலருக்கு வழங்கியிருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதா பிற்போடுவதா என்ற குழப்பநிலையில் கடந்த மூன்று மாதங்களாக முடிவுகளை திடமாக எடுக்கமுடியாத நிலையில் எப்படியும் ஒருவருடம் பிற்போடவேண்டும் என அவர் நினைத்தாலும் பலத்த எதிர்புகள் சில அரசியல் கட்சிகளாலும் வேறு சில பொது அமைப்புகளாலும் வெளிவரத் தொடங்கியதால் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை அவரால் தடுக்க முடியாது என்றே கருத முடிகிறது.
கடும் கண்டனம்
அரசியல்வாதிகளுடைய எதிர்ப்பு எல்லாம் வழமையானதாக இருந்தாலும் தற்போது சட்டத்தரணிகள் சங்கமும் அவருக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையால் நீதித்துறைசார் வழக்கறிஞர்களுடைய எதிர்பையும் அவர் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி, நீதி அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, வெளியிட்ட அறிக்கைகளுக்கு இலங்கையின் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் மட்டக்களப்பில் சென்ற அன்றே கடந்த (22.06.2024 ) கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளிவந்துள்ளது.
நீதித்துறைக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் முறையான முறைப்பாடு வடிவில் உரிய மன்றத்தில் முன்வைக்க வேண்டும். இதனை விடுத்து நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் நாடாளுமன்றத்தில் அறிக்கை மூலம் அதனை மேற்கொள்ளக்கூடாது என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
2024, யூன், 18இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் பேசும்போது, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அண்மைய வியாக்கியானத்தை விமர்சித்திருந்தார்.
இந்த விடயத்தில் நீதிமன்றம் 'நீதித்துறை நரமாமிசத்தில்' ஈடுபட்டுள்ளது என்று அவர் விமர்சித்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைடுத்து எதிர்வரும் 2024, யூலை 19 அன்று நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச, உயர்நீதிமன்றம் அரசியலமைப்பின் சில பகுதிகளை திறம்பட இடைநிறுத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தார். இதனை உலகப் போர் வெடிப்பதற்கு முன்னர் சிவில் உரிமைகளை இடைநிறுத்திய அடொல்ஃப் ஹிட்லரின் உத்தரவுடன் பார்ப்பதாக நீதியமைச்சர் கூறியிருந்தார்.
சட்டத்தரணிகள் கூட்டமைப்பு
இந்தநிலையில் குறித்த அறிக்கைகள் குடிமக்கள் மனதில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை தவிர கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் சில நலன்கள் கொண்ட வழக்குகள் குறித்து கருத்து வெளியிட்டதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதித்துறையைப் பற்றி நயவஞ்சகமான அபத்தமான கருத்துக்களை வெளியிடுவது அவர்களின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் செயலாகும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்தநிலையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் முன்னிற்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இந்த கடுமையான அறிக்கையானது கடந்த 1982 நிறைவேற்று ஜனாதிபதி முறை அமுல்படுத்திய காலம் தொடக்கம் 2019, வரை ஜனாதிபதிகளாக இருந்த எந்த ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் இவ்வாறு இலங்கையில் உள்ள சட்டத்தரணிகள் சங்கமோ, சட்டத்தரணிகள் கூட்டமைப்போ வெளியிடவில்லை என்பது உண்மை.
மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள்
ஆனால் தற்போதய ஜனாதபதி ரணிலுக்கு எதிராக இவ்வாறான அறிக்கையினை சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளதை சாதாரணமாக கருதமுடியாது.
ரணிலுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு இதன்மூலம் குறைவடையவும் வாய்புள்ளது. சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கொழும்பில் இந்த அறிக்கையை வெளியிடும்போது மட்டக்களப்பில் சென்ற ஜனாதிபதியை அங்குள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனும், வியாழேந்திரனையும் இடம் வலமாக வைத்து மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
அவர்கள் இருவருமே ஏட்டிக்குப்போட்டியாக ரணிலை அவரவர் காரியாலயங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களுடைய ஆதரவாளர்கள் முன்னிலையில் படம் எடுத்து தாம் அவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதாக கூறி பொன்னாடையும் நினைவுப்பரிசில்களையும் வழங்கி தேநீர் விருந்தோம்பலும் வழங்கி வைத்தனர்.
ஜனாதிபதி ரணிலுக்கு இது மகிழ்ச்சியான விடயமாகத்தான் இருக்கும் ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்தை ஈட்டும் கால்நடைப்பண்ணையாளர்கள் தமது மாடுகளை மேய்க்கும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த வெளிமாவட்டவர்கள் அத்துமீறி பயிர்செய்கை செய்வதை வெளியேற்றச்சொல்லி ஏறக்குறைய 300, நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை சித்தாண்டி சந்தியில் பண்ணையாளர்கள் நடத்துகின்றனர்.
இதே ஜனாதிபதி கடந்த 2023, ஜனவரி, 08ம் திகதி செங்கலடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த போது அவருக்கு எதிராக கால்நடைப்பண்ணையாளர்களும், தமிழரசுக்கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்பை சேர்ந்த பலரும் மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை மீட்புக்கு எதிராக கொம்மாதுறையில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்
கால்நடைப்பண்ணையாள்ர் சங்கத்தலைவர் நிமலன் உட்பட சில உறுப்பினர்கள் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து தமது நியாய பூர்வமான கோரிக்கையை கொடுத்து உரையாடினர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்
ஆனால் ஜனாதிபதி ரணில் அந்தப்போராட்டம் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது உடனே பண்ணையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன் ஆகிய மூவருடன் பண்ணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி அமலினி, மற்றும் சித்தாண்டி பண்ணையாளர்கள் உட்பட 37, பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் ஏறாவூர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆறுமாதங்களாக நான்கு தவணையில் இதுவரை நடைபெற்று அடுத்த ஆறாவது வழக்குத்தவணை எதிர்வரும் 2024, யூலை,10ம் திகதி பிற்போடப்பட்டுள்ளது.
மட்டக்களப்புக்கு கடந்த 22,23ம் திகதிகளில் சென்ற ஜனாதிபதி சித்தாண்டியில் தொடர் பொராட்டத்தை 300, நாட்களை எட்டும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களின் நிலை
அந்த பண்ணையாளர்களின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு காணும் எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை.
ஆனால் கால்நடை பண்ணையாளர் சங்கத்தலைவரும் இன்னும் சிலரையும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர் தங்கியிருந்த பாசிக்குடா உணவு விடுதியில் சந்தித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு விடயமாக ஜனாதிபதி ரணிலுடன் கதைத்ததாக ஊடகத்தில் வழமை போன்று படமும் செய்தியும் மட்டும் காணமுடிந்தது.
ஆக்கபூர்வமான எதிவும் இல்லை இது வெறும் கண்துடைப்பாகும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அவரை அழைத்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு நடாத்தி நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் சித்தாண்டி பண்ணையாளர்கள் தொடர்பாக வாயே திறக்கவில்லை.
அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய சிந்தனையுடன் செய்படும் இவர்கள் மக்கள் மீதோ மண்மீதோ எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை. இதுதான் தமிழர்களின் நிலை வடகிழக்கில் என்பதை புரிதல் நல்லது.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பொருளாதார வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பொருளாதார வளமாக அவருக்கு தெரியவில்லை அப்படித் தெரிந்திருந்தால் மயிலத்தமடு, மாதவனை, கெவிளியாமடு மேய்ச்சல்தரையில் அத்துமீறிய வெளிமாவட்டத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருப்பார் அப்படி செய்யவில்லை.
நாய்களை பராமரிக்கும் நிலையம்
அதேபோல் அடுத்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து கிடந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்க இருண்டுபோன நாட்டுக்கு மெழுகுவர்த்தியை ஏற்றி ஒளி கொடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் என புகழாரம் சூட்டியிருந்தார்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்தை ஈட்டித்தரும் கால்நடை பண்ணையாளர்களுடைய மாடுகளை மேய்க்கும் மேய்ச்சல் தரையை மீட்க எவராலும் முடியவில்லை, அதை ஜனாதிபதி ரணிலிடம் சுட்டிக்காட்டவும் முதுகெலும்பு இல்லை.
இந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் கடந்த 2020, பொதுத்தேர்தலின்போது கிழக்கை மீட்கப்போவதாக மட்டக்களப்பு மக்களிடம் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி பதவி பெற்றவர்கள் கிழக்கும் மீட்கவில்லை கிழக்கு பறிபோவதுதான் மிச்சம் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களால் தினமும் நிலம் பறிபோவதுதான் இன்றைய நிலை.
கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் ஜனாதிபதி ரணிலுடன் மட்டக்களப்பில் எல்லா இடங்களுக்கும் சென்று நிகழ்வுகளில் எல்லாம் பங்கு பற்றி ஆரவாரமாக ஈடுபட்டார்.
அவருக்கும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் அவரால் கூட நிறைவேற்று அதிகாரம கொண்ட ஜனாதிபதி ரணிலைக் கொண்டு தமிழ் பண்ணையாளர்களுடைய மேய்ச்சல் தரைகளை மீளப்பெறமுடியவில்லை.
வாகரையில் நாய்களை பராமரிக்கும் நிலையத்தை ஏற்படுத்தியவர் மயிலத்தமடு, மாதவனையில் மாடுகளை பராமரிக்கும் மேய்ச்சல் தரைகளை பெற்றுக்கொடுக்க அவராலும் முடியவில்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்
இதே நிலைதான் கடந்த முள்ளிவாய்க்கால் போர் மௌனித்து 15, ஆண்டுகள் கடந்த போதும் வடகிழக்கு தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சனையைத்தான் தீர்க்க முடியாவிட்டாலும் அடிப்படை பிரச்சினைகளயாவது தீர்த்துத்தர எந்த ஜனாதிபதியாலும் முடியவில்லை என்பதற்கு மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தலை விவகாரமும், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரமும் நல்ல உதாரணங்களாகும்.
கல்முனையில் வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் 90, நாட்களைகடந்து தொடர்ந்து நடைபெறுகிறது, மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம் 300, நாட்களை எட்டும் நிலையில் தொடர்கிறது.
ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆதரவு தேடிவரும் தற்போதய ஜனாதிபதி ரணில் அவர்களாலோ, எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கலோ இந்த பிரச்சினை தீர்க்க கூடியதாக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை இல்லை.
அவர்களை ஆதரிக்குமாறு கூறும் சம்மந்தன் ஐயாவிடமும் இதற்கு தீர்வு இல்லை. அவர்களை அழைத்து மட்டக்களப்பு, அம்பாறைக்கு வரும் ஆதரவாளர்களாலும் இதற்கு தீர்வு இல்லை, ஆனால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி இப்படியானவர்களை இவ்வாறான விடயங்களை கூட செய்யவில்லை என காட்டுவதற்காகவும் மேற்கொள்ளும் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் தரப்புகள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள். சிந்தியுங்கள்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ariyam அவரால் எழுதப்பட்டு, 27 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.