மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர்களை அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலியாற்றில் இடம்பெறும் மண் அரிப்பை தடுக்கும் வகையில் ஆற்றுக்கு குறுக்காக தடுப்புச்சுவர்களை அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தின் கீழ் உள்ள பாலியாறு முன்பு ஆழம் குறைந்த ஒரு ஆறாகவே காணப்பட்டது.
தற்போது மண் அரிப்பு காரணமாக ஆற்றின் ஆழம் ஐம்பது அடியையும் தாண்டி விட்டது என்றும், காலப்போக்கில் இவ்வாறு அரிப்பு ஏற்பட்டு மேலும் ஆழமாகக்கூடிய சூழல் காணப்படுவதாகவும், அதற்கான தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கையில், மேற்குறித்த ஆற்றுக்கு குறுக்காக தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுவதற்கான போதிய நிதிமூலங்கள் தங்களிடம் இல்லை எனவும், நிதி கிடைக்கும் பட்சத்தில் மேற்படி வேலைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



