மாவீரர் படிப்பகங்களை நினைவுபடுத்தும் முல்லைத்தீவு குமுழமுனை மக்கள்
மாவீரர் படிப்பகங்கள் வாசிப்பதனை ஊக்கப்படுத்தி மனிதர்களின் பூரணத்திற்கு பெரும் பங்காற்றியிருந்தன என அவற்றை மீளவும் நினைவுபடுத்துகின்றனர் முல்லைத்தீவு குமுழமுனை வாழ் மக்கள்.
பாவனையில் இருந்த நூலகம் மீண்டும் இயங்காது இருக்கின்றது. அதனை மீளவும் பயன்படுத்தக் கூடியதான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு குமுழமுனை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூலகத்தினை பயன்படுத்தி தேடலைச் செய்வதற்காக ஏழு கிலோ மீற்றருக்கு கூடிய தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய சூழல் அவர்களுக்கு இருக்கின்றது.
மாவீரர் படிப்பகம்
நூலக பயன்பாட்டுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் கிராமிய பொது அமைப்புக்களின் செயற்பாடுகள் அமைவதில்லை என நூல் வாசிப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் படி 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாவீரர் படிப்பகம் இருந்தது.தினசரி பத்திரிகைகளை படிக்கவும் குறைந்தளவு நூல்களை படிப்பதற்கும் அப்போது முடிந்ததாக குமுழமுனை வாழ் மக்கள் பலர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
விடுதலைப்புலிகளின் அரசியற்றுறையினாலும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினாலும் இந்த நூலக முயற்சி(மாவீரர் படிப்பகம்)சாத்தியப்பட்டிருந்தது.
இவ்வாறு சனசமூக கட்டமைப்புக்களுக்கு மேலாக நூல் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மாவீரர் படிப்பகம் என்ற கட்டமைப்பு பேணப்பட்டிருப்தனை மக்களுடனான உரையாடல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் சனசமூக நிலையங்களினூடாக நூலக மாதிரிகளை சிறியளவில் பேணிக் கொள்ளும் வாய்ப்புக்கள் இருந்த போதும் குமுழமுனையில் எந்த சனசமூக நிலையங்களும் செயற்பாட்டில் இல்லை என சமூக விடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
குமுழமுனையில் பொது நூலகம்
மூன்று கிராம சேவகர் பிரிவுகளால் நிர்வகிக்கப்படும் பிரதேசமாக இருப்பதுடன் முல்லைத்தீவில் உள்ள கிராமமான குமுழமுனை ஒரு நகரமாக தரப்படுத்தப்பட்டு அது நகர எண்ணையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சாதாரண தரத்திற்கான பரீட்சை நிலையமாக குமுழமுனை மகாவித்தியாலயம் நீண்ட காலமாக பயன்பட்டு வருகின்றமையும் நோக்கத்தக்கது. மேலும், உயர்தர வகுப்புக்களையும் குமுழமுனை மகாவித்தியாலயம் கொண்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தங்கபுரம், ஆறுமுகத்தான்குளம், ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களினால் சூழப்பட்டுள்ள குமுழமுனையில் பொது நூலகம் ஒன்று அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி விடுதலைப்புலிகளின் புலிகளின் காலத்தில் குமுழமுனை பரபரப்பான ஒரு கிராமமாக இருந்திருந்தது என ஒரு வயோதிபர் தன் நினைவுகளை மீட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
கிராம சேவகர் அலுவலக மாற்றம்
சனசமூக நிலையங்களின் செயற்பாட்டுக்கென வழங்கப்படும் கட்டிடங்கள் அவற்றுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
குமுழமுனையிலும் முன்னர் இருந்த கட்டிடங்களை மீளப் புனரமைத்ததோடு சிறிது காலத்தின் பின்னர் அவை பயன்பாடற்ற முறையில் கைவிடப்படுகின்றன.
மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்டு கட்டப்பட்ட சனசமூக புதிய கட்டிடத்தில் கிராமசேவகர் அலுவலகம் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தாயகப்பரப்பில் பல கிராம சேவகர் பிரிவுகளில் சனசமூக செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதில்லை என்பதோடு அவற்றுக்கான கட்டடங்களை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
இந்த சூழலில் சனசமூக செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடக்கின்றது என்ற கேள்வி விடையில்லாது தொடர்ந்து செல்வதாக சிலர் தங்களின் ஆதங்கத்தினை வெளியிடுவதும் நோக்கத்தக்கது.
பரபரப்பை இழந்து போன குமுழமுனைச் சந்தி
இறுதிப் போருக்கு முன்னர் மாவீரர் படிப்பகமாக இயங்கிய கட்டிடம் புதிப்பிக்கப்பட்டு சனசமூக நிலையமாக சிறிது காலம் பயன்படுத்தப்பட்டது. எனினும் நாளடைவில் அது செயலிழந்து விட்டது.
இப்போது பத்திரிகைகளை வாசிப்பதற்கோ புத்தகங்களை படிப்பதற்கோ இலகுவான வசதிகள் இல்லாமை கவலைக்குரிய விடயமாகும் என கல்வியலாளர்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
பயன்பாடற்ற கட்டடங்களாக மட்டுமே இருக்கும் இந்த கட்டத் தொகுதிகளைச் சூழ இருக்கும் சுற்று மதில்களில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு அழகு செய்யப்பட்டிருந்தன.
மாவீரர் நாள் கார்த்திகை 27, மாவீரர்களின் பெயர்களை அவர்களது இரணுவ தர நிலைகளுடன் கூடியதாக ஓவியமாக வரைந்திருந்தனர்.மதில்களை அழகுபடுத்தும் ஒரு முயற்சியாவதோடு புரட்சிகர மக்கள் எழுச்சியை பேணவும் அந்த முயற்சியை அவர்கள் பேணியிருந்தனர் என சமூக விடய ஆய்வாளர் மேலும் குறிப்பிட்டார்.
பல் பயன்பாட்டுத் தேவைகளுக்காக ஒன்று கூடும் போது பலரும் கூடிய பரபரப்பான சூழல் இப்போது இருப்பதில்லை என குறிப்பிட்டார் ஓய்வு பெற்ற அரசு பணியாளர் ஒருவர்.
ஆர்வமூட்டும் செயற்பாடுகள் தேவை
இன்றுள்ள இளையவர்களிடையே புத்தகங்களையும் நூல்களையும் வாசிக்கும் பழக்கம் அரிதாக இருக்கின்றது.ஆர்வமற்ற பலர் இடையே ஆர்வமுள்ள சிலர் இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
நூல்களை வாசிப்பவர் வாசித்தவற்றை தங்கள் வாழ்வியல் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும் போது வளரத்துடிக்கும் இளையவர்களுக்கு அது முன்னுதாரணமாக அமையும்.அவர்களை அது வாசிக்கத் தூண்டிவிடும்.
வாழ்வியல் மேம்பாட்டுக்கும் தேவையான நூல்களை படிப்பகங்கள் கொண்டிருக்க வேண்டும்.துறைசார் நிபுணர்களின் சுயசரிதைப் புத்தகங்கள், ஆய்வு நூல்கள், வரலாற்று ஏடுகள் என நூல்கள் பெறுமதிமிக்கதாக இருக்கும் போது அத்தகைய நூல்களை படிப்போரைக் கொண்டுள்ள சமூகம் பண்பாட்ட சமூகமாக இருக்கும் என்பது திண்ணம்.
நியாயப் பூர்வமாக சமூகப் பொருத்தப்பாடுடையதாக நடுநிலைத் தன்மையோடு செய்திகளை பிரசுரிக்கும் பத்திரிகைகளை நூலகங்கள் உள்ளீர்க்கும் போது நூலகங்களை பயன்படுத்தும் வாசகர்களின் அளவும் அதிகரிக்கும்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நூல்களையும் பத்திரிகைகளையும் இணையங்களையும் படிக்கும் வசதிகளை நூலகங்கள் தம்மில் கொண்டமைதல் காலத்தின் கட்டாயமாகும் என்பதும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |