நீர் மேலாண்மைக்கொரு சான்றாகும் யாழ்ப்பாணத்து அறிவியல்
யாழ். அல்வாய் - நெல்லியடி வீதியில் (B13) உள்ள ஒரு பாலம் பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஊட்டுகிறது.
வீதிக்கு குறுக்காக அமைக்கப்படும் பாலம் குளமும் தொட்டியுமாக இரு புறங்களிலும் இரு வேறு தோற்றங்களை கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்து மக்களின் நீர் மேலாண்மையை விளக்குவதற்கு இத்தகைய வீதிக் கட்டுமானங்கள் சிறந்த எடுத்துக்காட்டு என சுட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
அறிவியல் பூர்வமான கட்டுமானங்களை யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதிகளில் அதிகம் காணலாம்.
குளமும் தொட்டியுமாக பாலம்
அல்வாய் - நெல்லியடி வீதியில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இருந்து 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது இந்த குளமும் தொட்டியும் பாலம்.
வீதியின் ஒரு புறம் மாரிகாலங்களில் நிலம் நீரால் நிரம்பியிருப்பதோடு மறுபுறம் வயல்களைக் கொண்ட பூமியாக அது இருக்கின்றது.
மேலும், வீதியின் இடது புறம் மழைக்காலத்தில் குளமாக இருக்கின்றது.கோடை காலங்களில் நீரற்ற பரந்த புல் வெளியாக காணப்படும்.மாரி காலங்களில் அதிகளவு நீரை கொண்ட சிறு குளம் போல் தோற்றமளிக்கும்.
இந்நிலையில், இந்த பாலத்தில் நின்றவாறு நெல்லியடி சந்தியை நோக்கின் பாலத்தின் இடது கைப் பக்கத்தில் இந்த பரந்த குளம் இருக்கின்றது.
அத்தோடு வலது பக்கத்தில் பாலத்தின் ஊடாக வரும் தண்ணீரை தற்காலிகமாக தடுத்து நிறுத்தி தோக்கி வைத்திட உதவும் தொட்டியமைப்பு உண்டு.
இங்கு சேரும் அந்த நீரினை தொட்டியில் இருந்து வயல் நிலங்களுக்கு பாய்ச்சுவதற்கான கட்டமைப்புக்களை அந்த தொட்டி கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
தொட்டிக்கு வரும் நீரினளவை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு பாலத்தின் மற்றைய பக்கத்தில் (குளத்தின் பக்கத்தில்) உள்ள பகுதியில் பலகை இட்டுக் கொள்ளும் குளக்கட்டமைப்பு இயல்பு இருக்கின்றது. நீரோட்டளவை பலகைகளை இட்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு எமக்கு தேவையான அளவில் பெறமுடிகின்றது.
தொட்டியின் பயன்பாடுகள்
சாதாரணமான ஒரு வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட பாலமாக இது காணப்படுகிறது. இந்த பாலத்தின் அமைவிட சூழலினால் நீரைக் கட்டுப்படுத்தும் அமைப்பினை ஒரு புறமும் மறு புறம் நீர் தொட்டியையும் அமைக்கும் சூழலினை இயற்கை ஏற்படுத்திக் கொடுக்க அதனை புரிந்து செயற்பட்டுள்ளனர்.
நீரோட்டத்தினளவு அதிகமானால் பாலத்தினூடாக பாய்த்துவரும் நீர் பாலத்துடன் உள்ள வயலின் பயிர்களை அழித்துவிடும்.
இந்நிலையில், குறித்த வயலின் மண்ணின் இழையமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டு விடும்.இந்த தொட்டி இருப்பதால் இந்த நிலை தடுக்கப்படுகின்றது என வயல் பயிர்ச் செய்கையாளர்கள் சிலருடன் உரையாடிய போது குறிப்பிட்டிருந்தனர்.
நீர்த் தொட்டிப் பொறிமுறைகள் இருப்பதால் ஆரம்ப மழைக்கு கிடைக்கும் நீரினை தேக்கி வைத்துவிட்டு(பரவைக்குளத்தில்) பின்னுக்கு மழை குறைவாக கிடைக்கும் போது இதனை பயன்படுத்தும் வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
அத்தோடு, கோடை காலங்களில் நீண்ட நாட்களுக்கு தொட்டியில் நீர் வற்றாது இருப்பதால் கால்நடைகளுக்கான நீரூட்டல் இடமாகவும் சிறிது காலம் பயன்படுகின்றது எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும், மீன் பிடிக்கும் வாய்ப்புக்களையும் இந்த தொட்டியமைப்பு வழங்கும் சந்தர்ப்பங்களும் உள்ளதாகவும் இதில் தூண்டிலிட்டு மீன் பிடித்திருந்ததாகவும் ஒருவர் குறிப்பிட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சுண்ணாம்புக்கல் கட்டுமானம்
தொட்டி சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு இருக்கின்றது. இந்த கட்டுமானம் நீண்ட காலத்திற்கு முன்னர் கட்டப்பட்டு இன்றளவும் பயன்பட்டு வருகின்றது என குறிப்பிட்ட அவ்வீதியின் அண்மையில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் அதன் ஆரம்பம் பற்றிய குறிப்புக்கள் தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சுண்ணாம்புக் கல் வெள்ளை நிறமான கல்லாக இருப்பதால் வெள்ளைக் கல்லால் கட்டியிருப்பதாக சிலருடன் பேசும் போது அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அத்தோடு சுண்ணாம்புக் கல்லை வெள்ளைக்கல் என குறிப்பிடும் வழக்கம் இருப்பதனையும் இதனால் அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணத்தின் ஆரம்ப காலங்கள் தொட்டு இன்றுவரையும் கட்டுமானங்களில் சுண்ணாம்புக் கற்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இன்று சுண்ணாம்புக்கல்லின் பயன்பாடு குறைந்துள்ள போதும் அது முற்றாக இல்லாது போகவில்லை.
மேலும், யாழ்க் கோட்டையும் சுண்ணாம்புக் கல்லினால் கட்டப்பட்டுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் தொன்மைகளும் அறிவியல் ஆற்றல்களும் வளர்ந்து வரும் இளம் சந்ததியினரிடையே தெரிந்துகொள்ளும் ஆர்வமின்மை இருப்பதனையும் அறிந்துகொள்ள முடிந்தது.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்து அறிஞர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்களுக்கு தமது வரலாறுகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் வாய்ப்புக்களை இன்னும் அதிகமாக உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
வீதியும் அதன் பாலமும் புதிதாக திருத்தப்பட்டு உள்ள போதும் பலகையிடும் நீர்க் கட்டுப்பாடும் நீரைத் தேக்கி வைக்கும் தொட்டி தொழிற்பாட்டுக்கான கட்டுமானம் என்பன பழைமையை மாற்றாது அப்படியே சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட அமைப்பை பேணியிருக்கின்றமை மகிழ்வுக்குரியது என யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் இது தொடர்பில் தனது கருத்தினையும் பகிர்ந்திருந்தார்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் சர்ச்சை : இரண்டு கை உயர்த்தியவர்களால் பிற்போடப்பட்டது தேசிய மாநாடு
யாழ்ப்பாணத்து அறிவியல்
இலங்கையின் பல நகரங்களும் பாரம்பரியங்களும் இருந்த போதும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமும் அறிவியலும் நீண்ட வரலாற்றினையும் தனித்தன்மையையும் கொண்டது என யாழ்ப்பாணத்தின் அறிவியல் பற்றிய தேடலில் ஓய்வு பெற்ற வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய தமக்கென நூலகமொன்றை உருவாக்கிப் பேணிய யாழ்ப்பாணத்து படித்த சமூகம் அதனை தென்னாசியாவின் பெரிய நூலகமாக வளர்த்தெடுத்திருந்தது.
இந்த முயற்சிக்கு இலங்கை அரசின் அணுசரனை ஆரம்பகாலங்களில் கிடைத்திருக்கவில்லை என யாழ். நூலக தோற்ற வரலாற்றினை சுட்டிக்காட்டிய அவர் அறிவுத் தேடலிலும் அதனை பயனுடையதாக்குவதிலும் யாழ்ப்பாணத்து மக்கள் தனித்துவமானவர்கள், இலங்கை வாழ் மக்களில் முதன்மையானவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், நீர் மேலாண்மையில் சிறப்பான தேர்சிகளை அவர்கள் பெற்றிருக்கின்றனர். விவசாய பொறிமுறைகளிலும் கட்டுமானங்களிலும் வைத்தியதுறையிலும் ஆன்மீகத்திலும் அவர்கள் நிபுணத்துவம் பெற்றுவிட்ட ஒரு சமூகமாக தோற்றம் பெற்றிருக்கின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இன்றும் சுமைதாங்கிக் கற்களை காணலாம். இது கூட அவர்களது அறிவியலின் தேவை வழி தேடலின் விளைவு தான் என மேலும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |