விடுதலைப்புலிகளின் காலத்திற்கு திரும்புகிறதா வடக்கு மக்களின் வாழ்க்கை
தமிழீழ விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கில் சிறப்பான நிர்வாக தொகுதியொன்றினூடாக நிழல் அரசொன்றை உருவாக்கி இருந்தனர்.
அந்த அரசு நிர்வாகத்தில் மக்களுக்காக இருந்த பல விடயங்களை இன்றும் மக்கள் பாராட்டிப் பேசுவதை அவதானிக்க முடிகின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் நிர்வாகத்தில் உள்ள இடங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை எதிர் கொள்வதற்காக பல வழிமுறைகளை பொது மக்களும் கையாண்டிருந்தனர்.
எரிபொருளின் விலையேற்றம்
நாட்டில் நிலவும் எரிபொருட்களின் விலை ஏற்றத்தினால் வாகனங்களை பயன்படுத்துவது பொருளாதார நட்டத்தினை பெருமளவில் ஏற்படுத்துகின்றது.
இதனை தவிர்ப்பதற்காக மாட்டு வண்டில் பாவனையை நோக்கி பொது மக்கள் திரும்பத் தொடங்கி விட்டனர் என சமூக விடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
படிப்படியாக எரிபொருட்கள் விலையேறிச் செல்லும் போது ஏற்றுக்கூலி, எரிபொருள் செலவு என பொருட்களை இடம் மாற்றும் போது ஏற்படும் செலவுகளுக்கேற்ப வாகனங்களை பயன்படுத்துவது இலாபகரமானதாக இல்லை என வாகனங்களை வாடகைக்கு விடும் ஒருவர் குறிப்பிட்டார்.
குறுகிய இடங்களுக்கு பொருட்களை இடம் மாற்றுவதற்கும் பயணிப்பதற்கும் மாட்டு வண்டிகளை பயன்படுத்தக் கூடிய ஏது நிலைகள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலாபகரமான பயணம்
எரிபொருட்களை எரித்து பயன்படுத்தும் இயந்திரங்களை பயன்படுத்துவதை விட பொறிமுறை வலுக்களை பயன்படுத்தி பயணித்தல் இலாபகரமானதாக இருக்கும் என்பது திண்ணம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அதிகளவில் மாட்டுவண்டில்கள் பாவனையில் இருந்தன என இப்போதும் மாட்டு வண்டில்களை பயன்படுத்தி பனை மட்டைகளையும் தென்னோலைகளையும் ஏற்றி வியாபாரம் செய்யும் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தனது சிறு வயதிலிருந்து இன்று வரை மாட்டு வண்டில்களை பயன்படுத்தி வருவதாகவும் எரிபொருள் விலையேற்றம் பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வன்னியிலும் யாழின் பல பகுதிகளிலும் மாட்டு வண்டில்கள் பயன்பாட்டில் இருந்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாடுகளை கொண்டு இயங்கும் வண்டில்களும் தனியொரு மாட்டினைப் பயன்படுத்தும் வண்டில்களும் பாவனையில் இருக்கின்றன.
யாழின் சில பகுதிகளில் குதிரைகளை பயன்படுத்தும் வண்டில்களும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணைக்கு மாறும் பேரூந்துகள்
பயணிகள் பேரூந்துகள் தங்கள் வழித்தடத்தில் பயணிக்கும் போது நட்டத்தில் இயங்குவதாக அதன் உரிமையாளர்கள் பலர் அங்கலாய்க்கின்றனர்.
பேரூந்து பயணங்களுக்கான கட்டணங்களின் உயர்வு மக்களிடையே செல்வாக்குச் செலுத்துகிறது. அவர்கள் தங்களின் பேரூந்து பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் பயன்படுத்தும் டீசலுக்கான செலவும் சாரதிக்கான சம்பளத்திற்கும் கூட வரவு இல்லாது போய்விடுவதாகவும் தனியார் பேரூந்து உரிமையாளர்களிடையே ஆதங்கம் நிலவுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
இவற்றுக்கான குறைந்தபட்ச தீர்வாக டீசலில் இயங்கும் பேரூந்துகளை மண்ணெண்ணைக்கு மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் நடத்துநர் ஒருவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எரிபொருட்களை அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்திருந்ததால் டீசல் வாகனங்களை மக்கள் மண்ணெண்ணையில் இயக்குவதற்கு பழகியிருந்தனர்.
மண்ணெண்ணெயில் உழவு இயந்திரங்களைக் கூட திறம்பட அவர்கள் இயக்கினார்கள் என வாகன சாரதியாக பணியாற்றிய முதுசமொருவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
பெற்றோல் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் மண்ணெண்ணெய்யில் இயங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் ஒவ்வொரு பெற்றோல் குப்பி இருக்கும்.
அந்த பெற்றோலைக் கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்கியதும் பின்னர் அது மண்ணெண்ணையில் இயங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய பொருளாதார சூழல் விடுதலைப்புலிகளின் காலத்தில் தாம் வாழ்ந்ததை தமக்கு மீண்டும் நினைவுபடுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சவர்க்காரம் ,சீனிக்கு மாற்றீடு
அதிக தட்டுப்பாடு நிலவிய சீனி, சவர்க்காரத்திற்கு பதிலாக மாற்றீட்டு பொருட்களை பாவித்ததாக தங்கள் பழைய நினைவுகளையும் மக்களில் பலர் நினைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
சீனி இல்லாததால் கிடைக்கும் இனிப்பு வகைகளை கொண்டு தேனீர் பருகியதாகவும் தன் அம்மம்மா தேங்காய்பூவுடன் தேனீர் குடிப்பார் எனவும் பொறியியலாளராக பணியாற்றும் ஒரு இளைஞர் தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சவர்க்காரத்திற்கு பதிலாக பனம்பழங்களை பயன்படுத்தி ஆடைகளை தோய்த்ததாகவும் தன் நினைவுகளை மற்றொருவர் குறிப்பிட்டிந்தார்.
இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தினை எதிர்கொள்வதற்கு பொருத்தமான சிறந்த வழிமுறையாக விடுதலைப்புலிகளின் காலத்தில் வன்னியில் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு மாறிக் கொள்வதே நல்லது என அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள்
பொருளாதாரத்தின் பொருத்தமற்ற போக்கினை எதிர்கொண்டு வாழ்வதற்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுய பொருளாதாரம் நோக்கி அவர்கள் திரும்புவார்களேயானால் நலமாக வாழ முடியும் என விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றியிருந்த ஒருவரிடம் பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள முடியும் என வினவிய போது குறிப்பிட்டார்.
வீட்டுத்தோட்டங்களையும் கோழி வளர்ப்பு,ஆடு வளர்ப்பு,பால்மாடு வளர்ப்பு என தங்களுடைய தேவைகளுக்கு தேவையான பொருட்களை காசு கொடுத்து வாங்கும் நிலையை குறைக்க முயன்றால், காசினைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியாத பொருட்களை வாங்கிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட இலங்கை அரசின் பொருளாதார தடையை அப்படித்தான் எதிர்கொள்ள மக்களை ஊக்குவித்தார்கள்.
ஆடம்பரமற்ற வாழ்க்கை முறையை மக்கள் வாழத் தலைப்படுதல் அவசியம் என அவர் குறிப்புரைத்தமையும் நோக்கத்தக்கது.
அன்று ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு கொடுத்த பொருளாதார துயரை இன்று இறைவன் வழி இலங்கை அரசாங்கங்களும் அவர்கள் சார்பு மக்களும் எதிர் கொள்ளுகின்றனர்.
இந்த நெருக்கடி தாயக வாழ் ஈழத்தமிழரையும் பாதித்த போதும் இது போல அவர்கள் முன்பும் வாழ்ந்த அனுபவம் கொண்டவர்கள் என ஒரு ஐயா தன் ஆதங்கத்தினை பகிர்ந்து கொண்டமையும் இங்கே குறிப்பிடல் பொருத்தமானதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 21 January, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.