முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருவெள்ளம் : மீட்புப்பணியில் இராணுவம் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வருகின்ற கனமழையால் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.
பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள்
எனவே, குளங்களின் கீழ் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (19.12.2023) காலை 9 மணி வரையான தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 286 குடும்பங்களை சேர்ந்த 952 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 384 குடும்பங்களை சேர்ந்த 1436 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 376 குடும்பங்களை சேர்ந்த 1160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 254 குடும்பங்களை சேர்ந்த 782 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் 459 குடும்பங்களை சேர்ந்த 1239 பேரும் வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகள்
அந்த வகையில் மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள், இராணுவத்தினர், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள், சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |