புதுக்குடியிருப்பில் நிபந்தனைகளுடன் பெற்றோல், டீசல் விநியோகம் (Photos)
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழவும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதுடன், மக்களும் வரிசையில் காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவரும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என கட்டுப்பாடுகளை விதித்து எரிபொருள் நிலையங்கள் கட்டுப்பாட்டை விதித்து எரிபொருளை வழங்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு பௌசர் பெற்றோலே 25ஆம் திகதி வந்துள்ள நிலையில் மக்கள் வாகன ஓட்டிகள் எரிபொருளை பெறுவதில் நீண்ட வரிசையில் காத்து நிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதுக்குடியிருப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உந்துருளிக்கு 400 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்கு 500 ரூபாவிற்கும், கார் ஏனைய வாகனங்களுக்கு 2000 ரூபாவிற்கும் பொற்றோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகம் செய்யப்படுகின்றது.
டீசல் அரச வாகனங்களை தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு 2500 ரூபாவிற்கு மாத்திரம் வழங்கப்படுவதுடன் போத்தல் கான்களில் எரிபொருள் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் தொழில் நிலையங்களை வைத்திருப்பவர்கள் அவர்களின் மின்பிறப்பாக்கிக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்வதாயின் கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் 2 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என்றும் பல நிபந்தனைகளுடன் மக்களுக்கான எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, முள்ளியவளை, விசுவமடு போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் முற்றாக தீர்ந்த நிலை காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.






