யுத்தம் காரணமாக செயழிந்த ஓட்டுத்தொழிற்சாலை: பிரதேச மக்களின் கோரிக்கை (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை, கடந்த கால யுத்தம் காரணமாக சேதமடைந்து, செயலிழந்து காணப்படுவதனால் இதனை நம்பி வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள், பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஓட்டுத் தொழிற்சாலையானது 1968 மே மாதம் 20ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் அக்காலத்தில் 74 நிரந்தர ஊழியர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் கடமையாற்றி வந்தனர்.
200க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிய ஒட்டுத்தொழிற்சாலை, 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக செயலிழந்த நிலையில் குறிப்பிட்ட காலம் காணப்பட்டது.
பின்னர் 2003ம் ஆண்டு முதல் மீள இயங்கிய போதும் இறுதி யுத்தகாலத்தில் செயலிழந்து போன நிலையில் இன்றுவரை மீள ஆரம்பிக்கப்படாது காணப்படுகின்றது.
கடந்த 2018ம் ஆண்டு இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தினால் பொறுப்பேற்கப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் அதன் பணிகள் நிறைவடையாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும், அடுத்த மாத இறுதியில் இதன் பணிகள் நிறைவு பெறும் எனவும் அறிய முடிகின்றது.
எவ்வாறிருப்பினும் பலகோடி வருமானத்தை ஈட்டக்கூடிய இந்த ஓட்டுத்தொழிற்சாலையினை இயங்க வைப்பதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்ற முடியும் எனவும், இதனை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





