ஆடைத்தொழிற்சாலை கொத்தணியால் முடங்கியது முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1500 வரையான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் .இவர்களில் இதுவரை 327 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடைத்தொழிற்சாலை கொத்தணி இன்னும் பல நூற்றுக்கணக்கான தொற்றாளர்களை உருவாக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று இரவு 11 மணிமுதல் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருபகுதி முழுமையாக முடங்கியுள்ளதோடு, முடக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கள் பல மடங்காக அதிகரித்துள்ளன.
அத்தோடு பாதுகாப்பு கடமைகளில் உள்ள இராணுவத்தினரை, பொலிஸாரை ஊடகங்கள் ஒளிப்பதிவு செய்ய பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் மக்கள் அடையாள அட்டை நடைமுறையுடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளனர் .
இந்நிலையில் மே 18 நாளான இன்று போரில் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அதனை முடக்கம் செய்யும் செயற்பாடாகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்த மக்களை மக்கள் நினைவிற்கொள்வார்கள் என்ற
அச்சத்தில் போடப்பட்ட அத்தனை கோவிட் நோய்த்தடுப்பு சட்டங்களையும்
புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு போட்டிருந்தால் இந்நிலை
வந்திருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.