முல்லைத்தீவில் காட்டு விலங்குகள் தொடர்பான எச்சரிக்கை பதாகை தேவை
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல முதன்மை வீதிகள் காடுகளுக்கு ஊடாகவே காணப்படுகின்ற நிலையில் காட்டுயானைகள் வீதிகளின் குறுக்கே செல்கின்ற பாதைகளை இனம் கண்டு அவற்றை வீதியில் அடையாளப்படுத்த வேண்டிய தேவை சம்மந்தப்பட்ட திணைக்களத்திற்கு உண்டு.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதிதாக வரும் பயணிகள் மாங்குளம் தொடக்கம் கொக்காவில் வரையான ஏ9 வீதி மற்றும் மாங்குளம் தொடக்கம் ஒட்டிசுட்டான் வீதி, ஒட்டுசுட்டான் முள்ளியவளை வீதி, முள்ளிவளை களிக்காடு ஊடாக நெடுங்கேணி வீதி,நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வீதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் வீதியினை கடந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அறிவித்தல் பதாகை
சில இடங்களில் வீதிகளில் நின்று காட்டுயானைகள் சண்டை பிடிப்பதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இவ்வாறு ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒரு பகுதியில் மாத்திரம் வனவிலங்குகள் பாதையினை கடந்து செல்வதால் அவதானமாக வாகனங்களை செலுத்துங்கள் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அறிவித்தல் பதாகை ஒன்ற நாட்டப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இதனை பார்ப்பவர்களுக்கு மாத்திரம்தான் இது காட்டுயானை பிரதேசம் என்று தெரிகின்றது.
இவ்வாறு ஏனைய பகுதிகளான மேற்குறிப்பிட்ட வீதிகளிலும் இந்த அறிவித்தல் பதாகையினை சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் நாட்டி வைக்க வேண்டும்.
குறிப்பாக யானை உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஊடாக பயணிக்கும் பயணிகள் இவ்வாறான பதாகைகளை இனம் கண்டு குறித்த பகுதி ஊடாக அவதானமாக பயணிக்க முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |