சுரேஷ் சலே விவகாரத்தில் வன்மமான அணுகுமுறைகள் வேண்டாம்..! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தில் வன்மமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவோம்” என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பொலிசாரின் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது காட்டப்படும் வன்மமான நடவடிக்கைகளுக்கு எதிராக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டை மீட்டெழுக்க உதவியவர் சுரேஷ் சலே
''உங்கள் கட்சியின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீர, பொலிஸ் காவலில் கொலை செய்யப்பட்டு, அவரது உயிர் பிரிவதற்கு முன்பே சுடுகாட்டிற்கு அனுப்பப்பட்ட காட்டுமிராண்டித்தனமான காலத்தின் கொடிய கறைகள் இந்த ஜனநாயக அரசின் மீது மீண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பது அனைவரின் அசைக்க முடியாத எதிர்பார்ப்பாகும்'' என்றும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், கொடிய பயங்கரவாத யுத்தமொன்றினால் அரசும் நாடும் முடங்கிப்போய்க் கிடந்த காலகட்டத்தில் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து நாட்டை மீட்டெடுப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கிய ராணுவ அதிகாரிகளில் ஒருவராகவே சுரேஷ் சலே குறித்தும் பொதுமக்கள் மத்தியில் ஒரு மரியாதை நிலவுகின்றமை குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமக்கு அளிக்கப்படும் அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்து, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரையும், ஒரு பொதுவான சந்தேக நபராகக் கருதப்பட்டு, அனைவருக்குமான சட்டப் பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, தாங்கள் கருணையான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அக்கடிதம் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, திலக் ராஜபக்ச, உபுல் கலபத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் கையொப்பமிட்டு மேற்குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO