விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ரவிகரன் எம்பி கோரிக்கை
போலி களைநாசினிகளின் ஊடுருவல்கள் அதிகரித்திருப்பதால் நெற்செய்கை விளைச்சல் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நெல் விளைச்சலில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் போலி களைநாசிநிகளைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
உரிய பொறிமுறை
இதுதொடர்பில் அவர் மேலும், "மருந்தகங்களில் போலி மருந்துகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் பொறிமுறையைப் போல, நெற்செய்கையில் பயன்படுத்துவதற்காக கடைகளில் விற்கப்படும் களைநாசினிகளையும் ஆய்வுசெய்து கட்டுப்படுத்தும் பொறிமுறை இலங்கையில் மேலும் முறைப்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகள் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் களைநாசினிகளிலும் போலி களைநாசினிகளின் கலப்படம் இருப்பதால், நெற்செய்கையின் விளைச்சலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் முறையிடுகின்றனர்.
எனவே இவ்வாறான போலி மருந்துகளின் கட்டுப்பாடு தொடர்பிலும் அரசு தகுந்த பொறிமுறை ஒன்றை வகுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.