சீனத் தூதுவரைச் சந்தித்த திலித் எம்.பி
சர்வஜன பலய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கை நேற்று(04.11.2026) கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை - சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் இலங்கை இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி
இந்தச் சந்திப்பின்போது, இலங்கையுடன் சீனா நீண்டகாலமாகப் பேணிவரும் நட்புறவையும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கிவரும் பங்களிப்பையும் திலித் ஜயவீர எம்.பி. பாராட்டியுள்ளார்.

அத்துடன், "சீனா இலங்கையின் மிக முக்கியமான நண்பனாகும். எமது நாட்டுக்காகச் சீனா செய்துள்ள அளப்பரிய பங்களிப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, அதற்குப் பதிலாகச் சீனா எம்மிடமிருந்து மிகக் குறைவாகவே எதிர்பார்த்துள்ளது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர எம்.பி., கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை - சீனா உறவு மிகவும் வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
50 ஆண்டுகளில் இலங்கையின் வளர்ச்சி
அத்துடன், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி இலங்கை பயணிக்கும்போது, உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்கும் இலக்கை அடைவதற்காகச் சீனாவிடமிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 50 ஆண்டுகளில் இலங்கையின் வளர்ச்சிப் பயணத்தில் சீனா எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தொடர்பில் சீனத் தூதுவர் தனது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் சர்வஜன பலய கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ரொஷான் ரணசிங்க, வைத்தியர் சன்ன ஜயசுமன, காமினி வலேபொட, அனுராதா யஹம்பத், சட்டத்தரணி மதுர விதானகே, இரங்க மெண்டிஸ் மற்றும் அனுருத்த ஹேரத் உள்ளிட்ட பலர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை