இனியும் தாமதம் வேண்டாம்..! உட்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தயாசிறி எம்.பி வலியுறுத்தல்
நீதிமன்ற வழக்குகளாலும் தொடர்ச்சியான உட்கட்சி மோதல்களாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கிப் போயுள்ளன என்றும், அந்தக் கட்சி ஒரு செயலற்ற கட்சியாக நிலைமாறியுள்ளதால் எதிர்வரும் தேர்தல்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் பாரிய நெருக்கடிகள் மற்றும் உட்கட்சி முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் விசேட கலந்தாய்வு நேற்று(06.11.2026) இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
செயலற்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு வருவதால் கட்சியின் இயங்குதன்மை முற்றிலும் முடங்கியுள்ளது தொடர்பில் இந்தக் கலந்தாய்வில் விரிவாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அவர்கள் நடத்தும் மாநாடுகள், மே தினக் கூட்டங்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படும் தொகுதி அமைப்பாளர்கள் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஏற்பதில்லை என்றும் இவ்வாறான நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியற்றவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தற்போதைய சூழலில் உத்தியோகபூர்வமாகத் தனித்துத் தேர்தலில் போட்டியிடக் கூட முடியாத பரிதாப நிலை உருவாகியுள்ளது. கட்சி தொடர்ந்து அழிந்துபோவதைத் தடுக்கவேண்டுமாயின், உடனடியாக உட்கட்சி உத்தியோகபூர்வத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சியின் யாப்பு விதிமுறைகளுக்கமைய ஆண்டுதோறும் புதிய நிர்வாகத் தெரிவுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடந்த மூன்று வருடங்களாக எவ்வித தேர்தலும் நடத்தப்படவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவிப்பு
விதிகளை மீறித் தொடர்ந்தும் பதவிகளில் நீடிப்பவர்களின் தற்போதைய நிர்வாகக் குழு முற்றிலும் செல்லுபடியற்றதாகும். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு தாமும் தமது அணியினரும் கட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளோம்.
நீதிமன்ற வழக்குகளுக்கு அப்பால் தேர்தல்கள் ஆணைக்குழுவே அரசியல் கட்சிகளைத் தொடர்ந்து இயங்குநிலையில் வைத்திருக்கும் சட்டப் பொறுப்பைக் கொண்டுள்ளதால், இந்த கலந்தாய்வை ஏற்பாடு செய்தமைக்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், தற்போதைய நிர்வாகப் பதவிகளைப் பிடித்துக்கொண்டு இருப்பவர்கள் எவரும் பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படாது தமது மாவட்டங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவர்.
எனவே, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ற ரீதியில், அடிமட்டக் கட்சி ஆதரவாளர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, கட்சியை மீளக் கட்டியெழுப்பும் முகமாக உடனடியாக உட்கட்சி தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாம் கோரியுள்ளோம் என்றார்.