தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரிணி
தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பிரேரணை படுதோல்வியடைவது உறுதி என்றும், இந்தப் பிரேரணை மூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும் என்றும் பிரதமர் ஹரிணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டிக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
படுதோல்வியடைவது உறுதி
இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
"எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். சர்ச்சைக்குரிய பாடத்திட்டம் (தரம் 6 ஆங்கிலம்) எந்தவொரு மாணவருக்கும் வழங்கப்படவில்லை. அச்சிடப்பட்ட மொடியூலின் அனைத்துப் பிரதிகளும் தற்போது முத்திரையிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன"என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தரம் ஆறு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடிப்படையாகக்கொண்டு கல்வி அமைச்சுப் பதவியை வகிக்கும் பிரதமருக்கு எதிராக எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளன.

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டப்பட்ட நிலையில், இன்று பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமரிடம் ஊடகங்களால் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வியடைவது உறுதி. எனினும், இதன்மூலம் கல்வி பற்றி கதைப்பதற்கு வாய்ப்பு கிட்டும்” என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri