மகளைக் கடித்து கொடூரமாக சித்திரவதை செய்த தாய் - தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்
ஹொரண பகுதியில் தனது 14 வயது மகளைக் கடித்து, நீண்டகாலமாகக் கொடூரமான முறையில் தாக்கி சித்திரவதை செய்து வந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் உள்ளானதாகக் கூறப்படும் சிறுமி, ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை அடுத்தே சிறுமியின் நிலைமை குறித்து தகவல் வெளிவந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ அறிக்கை
சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் தன் மகளை நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகத் தாக்கி வந்துள்ளதோடு, கடித்துக் காயங்களை ஏற்படுத்தி மிகவும் கொடூரமாக நடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்தத் தீவிர சித்திரவதைகள் காரணமாக, சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கும் மனக் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.