யாழில் கோவிட் தொற்றால் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்
யாழ்ப்பாணத்தில் கோவிட் வைரஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகிய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த வயது - 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஆறு நாட்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முற்பகல் 10.30 மணிக்குச் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவருக்குக் கோவிட் நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தி இன்று மாலை பரிசோதனை அறிக்கையிடப்பட்டுள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த குடும்பப் பெண் கோவிட் தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளதுடன்,சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் சடலம் தகனம்
செய்யப்படவுள்ளது.