7 ஆயிரம் ரஷ்ய படைகள் கொல்லப்பட்டனர்! - உயர் அதிகாரிகள் பலரை சிறைபிடித்தது உக்ரைன்
உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் ஜனாதிபதி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த எண்ணிக்கை 6 ஆயிரமாக இருந்தது என உக்ரைன் இன்றைய தினம் அறிவித்திருந்தது. மூத்த அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத் தளபதி ஒருவர் பலத்த காயமடைந்த பின்னர் பெலாரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையில் ரஷ்யா மிகவும் வித்தியாசமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய அறிக்கையில், 498 துருப்புக்கள் தாக்குதலில் இறந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்- ரஷ்யா எச்சரிக்கை
இதேவேளை, மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதங்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உக்ரைனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பொருளாதார தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருந்தது. ஆனால், விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை. உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்க ரஷ்யா அனுமதிக்காது.
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதங்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்கினால் ரஷ்யா உண்மையான ஆபத்தை சந்திக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.