ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான 500க்கும் மேற்பட்ட பொலிஸார்
ஐஸ் உட்பட போதைப் பொருட்களுக்கு அடிமையான 500க்கும் மேற்பட்ட பொலிஸார் பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் பணி முடிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்
தினமும் பணி முடிந்த பின்னர், போதைப் பொருளை பயன்படுத்தும் குழு ஒன்றுடன் இணைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை அந்த குழுவினருடன் மேல் மாகாண குற்றவியல் பிரிவினர் கடந்த 25 ஆம் திகதி கைது செய்தனர்.
இதனையடுத்து பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் போதைப் பொருளுக்கு அடிமையான பொலிஸார் பற்றி மீண்டும் பேசப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர், ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தும் 15 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டதாக திணைக்களத்தில் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் 6 லட்சத்து 8 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக வெலிகடை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதற்கு அமைய ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் வசிக்கும் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவரது வீட்டை பொலிஸார் கடந்த 25 ஆம் திகதி சோதனையிட்டுள்ளனர்.
அப்போது மற்றுமொரு நபர் அந்த வீட்டில் இருந்துள்ளதுடன் அவரிடம் தொலைபேசி ஒன்றும் கொட்டாவை பிரதேசத்தில் உள்ள அடகு கடையொன்றில் நகை அடகு வைக்கப்பட்டமைக்கான பற்றுச்சீட்டும் இருந்துள்ளது.
இவர்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரித்த போது, அவர்களில் ஒருவர் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதும் அவர் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
புதிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்!
ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான 500க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் கடமையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
போதைப் பொருளுக்கு அடிமையான புதிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமாக தகவல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை காரணமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய பொலிஸார் மத்தியில் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதுடன் பொலிஸாருக்கு இரத்த பரிசோதனை செய்யும் முறையையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.