உக்கிரமடையும் காசா போர் களம்: அதிகரிக்கும் சிறுவர்களின் பலி எண்ணிக்கை
மூன்றே வாரங்களில், காசா பகுதியில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 3600ஐ கடந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு முதல் உலகின் மோதல் வலையங்களில் வருடாந்தம் உயிரிழந்த சிறுவர்களின் மொத்த எண்ணிக்கையை விட இது அதிகம் என சிறுவர்களின் பாதுகாப்பிற்காக செயற்படும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா மற்றும் இஸ்ரேலிய சுகாதார அமைச்சுகளின் தகவல்களுக்கு அமைய, அக்டோபர் 7 முதல் 3,257 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் காசாவில் குறைந்தது 3,195 சிறுவர்களும், மேற்குக் கரையில் 33 சிறுவர்களும், இஸ்ரேலில் 29 சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக “சேவ் தி சில்ரன்” அமைப்பு (Save the Children) தெரிவித்துள்ளது.
விரிவாக்கப்பட்ட தரை நடவடிக்கைகள்
கடந்த மூன்று வருடங்களில் உலகளவில் 20ற்கும் மேற்பட்ட நாடுகளில் நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையை விட காசா பகுதியில் மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட 7,703 பேரில் 40%ற்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசம் மற்றும் இஸ்ரேலில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,000 சிறுவர்கள் காசா பகுதியின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து காணாமல் போயுள்ளதாகவும், உயிரழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் “விரிவாக்கப்பட்ட தரை நடவடிக்கைகளை” அறிவித்ததோடு, இது சிறுவர்கள் இறப்புகள், காயங்கள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்குமென எச்சரிக்கப்பட்ட நிலையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுவரை, காசாவில் குறைந்தது 6,360 சிறுவர்களும், மேற்குக் கரையில் குறைந்தது 180 சிறுவர்களும், இஸ்ரேலில் குறைந்தது 74 சிறுவர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காசா பகுதியில் தற்போது சிறுவர்கள், உட்பட 200ற்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக சிக்கியுள்ளனர் எனவும் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 174 ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.