அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான ஐவர்..! விசாரணையில் வெளியான தகவல்
மொனராகலை - கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கும்புக்கன பகுதியில் உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இருவர் கைது
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் பூஜை வழிபாட்டிற்காக குடும்பமாக டிப்பர் லொறியில் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, ஆர்.டி.ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (வயது 21) மற்றும் தாரக மதுஷான் (31 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஏ.எம். திலகரத்ன பண்டார (56) மற்றும் பசிந்து தினேஷ், தந்தை மற்றும் மகன் ஆவர்.
இதனையடுத்து விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.