அமெரிக்க இராணுவ பலம் குறித்து ஆசிய நட்பு நாடுகள் கவலை
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ தளவாடங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு வருவதால் ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன.
ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசி விமானம் தாங்கி போர்க்கப்பலான 'யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வொஷிங்டன்' அங்கிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அத்துடன், தென் கொரியாவில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் பாகங்களும், அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்புகளும் மத்திய கிழக்கு போர்த்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ நடவடிக்கை
அமெரிக்காவின் இந்த நகர்வானது, தென் சீனக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தையும் இராணுவ நடவடிக்கைகளையும் மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் பிராந்தியப் பாதுகாப்பு உத்தரவாதம் பலவீனமடைந்து வருவதாகக் கருதும் ஜப்பான், தாய்வான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள், தங்களது சொந்த பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை கணிசமாக உயர்த்தி வருகின்றன.
இருப்பினும், இந்த நகர்வு ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னமும் பொருளாதார நலன்களும் தொடர்ந்தும் வலுவாகவே இருக்கும் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.